குஜராத்தில் புல்டோசர் வைத்து 100 வீடுகள் இடிப்பு: உத்தரவிட்டது யார் என்பதில் நீடிக்கும் மர்மம்?!
குஜராத்தின் சூரத் நகரில் கிட்டத்தட்ட 100 வீடுகள் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் சூரத் நகரில் கிட்டத்தட்ட 100 வீடுகள் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் உள்ளது.
சூரத் நகரின் நாசீர்நகர் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் புல்டோசர்கள் நுழைந்து இடிப்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில் அதற்கு எந்த அரசுத் துறையும் பொறுப்பேற்கவில்லை.
வீடுகளை இடிக்க உத்தரவிட்டது யார் என்றும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எந்தத் துறையின் கீழ் அனுமதி பெறப்பட்டது என வீடுகளை இழந்தவர்கள் கேள்வி எழுப்பி அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், நாசீர்நகர் பகுதியில் 100 வீடுகள் ஒரே நேரத்தில் இடிக்கப்பட்டதால் குடும்பங்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, அவர்களது உடைமைகள் இடிபாடுகளில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்துள்ளது அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுப்பதால் இதுதொடர்பான குழப்பம் மேலும் அதிகரித்து வருகின்றது.
வீடுகள் இடிக்கப்பட்டபோது நகராட்சி அதிகாரிகளும், கணிசமான எண்ணிக்கையில் காவல்துறையினரும் அப்பகுதியில் இருந்த போதிலும், இந்த நடவடிக்கையில் சூரத் மாநகராட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக எம்எல்ஏ வினு மோர்டியா கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இதுபற்றி பேசியபோது, “அதிகாரிகள் அளித்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது. சட்டப்பூர்வமான எல்லைக் கோடு வரையவும், சாலை ஓர அளவீடுகளை மேற்கொள்ளவும் மட்டுமே மட்டுமே நகராட்சி குழு அப்பகுதிக்குச் சென்றது. வீடுகளை இடிக்க எந்த உத்தரவோ, அனுமதியோ வழங்கப்படவில்லை. நகராட்சி கோப்புகளில் இந்த நடவடிக்கை தொடர்பான எந்தப் பதிவும் இல்லை. இது தொடர்பாக, சூரத் மாநகராட்சியின் மத்திய மண்டல உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன். நகராட்சி நிர்வாகத்துக்கு இதில் எந்தப் பங்கும் இல்லையென்றால், பட்டப்பகலில் புல்டோசர் மூலம் குடியிருப்புகள் எவ்வாறு அகற்றப்பட்டது. இதற்கான துணிச்சல் யாருக்கு உள்ளது? இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் பற்றி விசாரித்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
வீடுகளை இடித்தபோது காவல்துறையினர் மக்களின் வேதனைக் குரல்களைக் கண்டுகொள்ளாமல் அங்கேயே நின்றதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சட்ட அமலாக்கத் துறையினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த உள்ளூர்வாசியான ஜாவீத் ஷா, “ஜேசிபி இயந்திரங்கள் வீடுகளை இடித்தபோதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளைக் காப்பாற்ற அழுதபோதும் காவல்துறையினர் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர். வீடுகள் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது என்றால், அதற்கான உத்தரவையோ அல்லது நீதிமன்ற அனுமதியையோ காவல்துறை ஏன் கேட்கவில்லை? அவர்கள் ஏன் மௌன சாட்சிகளாக அங்கு இருந்தனர்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நடவடிக்கை மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் வாகனப் பணியாளர்கள் ஆகியோர் குறித்து உள்விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நகராட்சி நிர்வாகமும் இதில் பிரச்னைக்குரிய சூழலில் சிக்கியுள்ளது.
சூரத்தில் அனுமதியற்ற சிறிய கட்டுமானங்களின் மீது கூட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது வழக்கம். இந்த நிலையில், நிர்வாகத்தின் அனுமதியின்றி மொத்த குடியிருப்பும் எவ்வாறு இடிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், நில மாஃபியா கும்பல்களுடன் இணைந்து அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சதியாக இவை இருக்கலாம் என்ற கோணத்திலும் விவாதங்கள் எழுந்துள்ளன.
வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவோ, வாழ்வாதாரங்களை மீட்டுத் தரவோ நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள், வீடுகளை இழந்தவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வருவதால், இது அப்பகுதியில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அங்கிருந்த இடிபாடுகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு பொறுப்பேற்க யார் முன்வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
100 houses demolished by bulldozers in Gujarat: Mystery persists over who ordered it?!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.