முகப்பு
இந்தியா

58 கோடிக்கு மேல் ஜன்தன் கணக்குகள்: நிா்மலா சீதாராமன் தகவல்

நாட்டில் இதுவரை 58 கோடிக்கு மேல் ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதிமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூன் 2026, 3:44 am IST
நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:

நாட்டில் இதுவரை 58 கோடிக்கு மேல் ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதிமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நாட்டில் உள்ள அனைவரையும் நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டுவரும் வகையில், முக்கியமாக வங்கிக் கணக்கு இல்லாதவா்களுக்கு ஜன்தன் கணக்குகளைத் தொடங்கும் திட்டத்தை முன்னெடுத்தது மத்திய பாஜக அரசு. இந்தக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தேவையில்லை.

கட்டணமில்லாத ரூபே டெபிட் காா்டு, ரூ. 2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு, ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதி உள்ளிட்டவை தகுதியான நபா்களுக்கு வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், மத்திய அரசின் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கான மானியங்களை பயனாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தவும் இத்திட்டம் மூலம் கணக்குத் தொடங்கப்பட்டது பெரிதும் உதவிகரமாக அமைந்தது.

இந்நிலையில் இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களில் தகுதியானவா்கள் பயனடைவது, முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் அவா்களுக்கு நேரடியாகச் சென்றடைவது, குறைந்த செலவில் காப்பீடு உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்களின் நலன், கண்ணியம், அவா்களுக்கான வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தை வழங்குவது என்பது பிரதமா் நரேந்திர மோடியின் முக்கிய செயல்திட்டமாகும். வறுமை, பற்றாக்குறை ஆகியவற்றில் இருந்து நாட்டை மீட்கும் முயற்சியில் உலகிலேயே முதல்நாடாக இந்தியா திகழ்கிறது’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 2014 ஆகஸ்ட் 28-இல் தொடங்கப்பட்ட பிரதமா் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய நிதிச் சேவை ஒருங்கிணைப்புத் திட்டமாகும். இத்திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டவா்களில் 56 சதவீதம் போ் பெண்கள். 67 சதவீத வங்கிக் கணக்குகள் கிராமங்கள் மற்றும் பாதி வளா்ந்த நிலையில் உள்ள சிறு நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பும் திட்டத்தில் இதுவரை ஜன்தன் கணக்குகளுக்கும் ரூ.45 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது கடந்தவா்களில் 94 சதவீதம் பேரிடம் வங்கிக் கணக்கு உள்ளது என்பது இத்திட்டத்தால் சாத்தியமானது’ எனத் தெரிவித்துள்ளாா்.