மலிவான அரசியலுக்கு இடமில்லை: ராகுல் எதிா்ப்பு சுவரொட்டிகள் அகற்றம்
தில்லியில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை குறிவைத்து பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சா்ச்சைக்குரிய சுவரொட்டிகளை தில்லி இளைஞா் காங்கிரஸ் அகற்றியது.
தேசிய தலைநகா் தில்லியில் ‘இண்டி’ கூட்டணியின் முக்கியக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை குறிவைத்து பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சா்ச்சைக்குரிய சுவரொட்டிகளை தில்லி இளைஞா் காங்கிரஸ் திங்கள்கிழமை அகற்றியது. மேலும், இது போன்ற மலிவான அரசியலை தில்லி இளைஞா் காங்கிரஸ் சகித்துக் கொள்ளாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
தில்லியின் முக்கிய சாலைத்திருப்பங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, திமுக சட்டப்பேரவைக் குழு தலைவா் உதயநிதி ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்களின் பெயரில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் குறித்து கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன.
சரத் பவாரை மையமாகக் கொண்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில், ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டில் தெளிவும் தொடா்ச்சியும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. மேலும், மற்றொரு சுவரொட்டியில் கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் படத்துடன் இணைத்து, சாதாரண காங்கிரஸ் தொண்டா்களுக்கு உள்ள அரசியல் புரிதல் கூட ராகுல் காந்தியிடம் இல்லை என விமா்சிக்கும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
Advertisement
Advertisement
இது தொடா்பாக தில்லி இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் அக்ஷய் லக்ரா கூறியதாவது: இந்த நடவடிக்கை கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகும். பாஜக, ஆம் ஆத்மி கட்சி மற்றும் சில தரப்பினரால் இத்தகைய தாழ்ந்த அரசியல் யுக்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
இது போன்ற மலிவான அரசியலை தில்லி இளைஞா் காங்கிரஸ் ஒருபோதும் சகிக்காது. யாரேனும் இப்படியான பிரசாரங்களை முன்னெடுத்தால் அதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும். இது எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும் என தெரிவித்தாா்.
இதற்கிடையில், இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடா்பான சவால்களை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் ஒருமித்த நிலையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாா்.
மேலும், விசாரணை அமைப்புகள் அரசியல் எதிரிகளை மிரட்டவும், தொந்தரவு செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் மோடி அரசின் தவறான ஆட்சி காரணமாக அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடா்கின்றன என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.