அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்
கேரள அரசு நிர்வாகத்தில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன தவறு? - கேரள முதல்வர் வி. டி. சதீசன்
திருவனந்தபுரம் : கேரள அரசு நிர்வாகத்தில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் ‘செய்யறிவு’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவிருப்பதாக அம்மாநில முதல்வர் வி. டி. சதீசன் தெரிவித்தார்.
செய்யறிவு தொழில்நுட்ப கருவிகளையும் அத்தொழில்நுட்பத்தின் அம்சங்களையும் அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தி, தரவுகளை முன்னிலைப்படுத்தியதொரு நிர்வாகத்தை கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கேரள அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, கேரள அமைச்சரவையில் செய்யறிவுக்கென தனியொரு துறையை உருவாக்கியுள்ளது வி. டி. சதீசன் தலைமையிலான கேரள அரசு என்பது கூடுதல் தகவலாகும்.
முன்னதாக, கேரளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்.) அரசால் அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 4-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ‘வெள்ளை அறிக்கை’, செய்யறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த மூத்த தலைவர் டி. எம். தாமஸ் ஐசாக் குற்றச்சாட்டு சுமத்தினார். அரசு ஆவணங்களைக் கையாளும் நடைமுறைகளில் செய்யறிவின் பயன்பாடு ஆபத்தை விளைவிக்குமென்ற கண்ணோட்டத்தில் அவர் அச்சத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு எதிர்வினையாக கேரள முதல்வரின் இன்றைய பேட்டி அமைந்திருந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து, புதன்கிழமை (ஜூன் 10) செய்தியாளர்களுடன் பேசிய சதீசன், “செய்யறிவு பயன்படுத்தப்பட்டதாக சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஒருவேளை, செய்யறிவு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதில் தவறு என்ன இருக்கிறது? இத்தகைய நடவடிக்கைகளுக்கு நாங்கள் (அரசு) செய்யறிவைப் பயன்படுத்துவோம். ஆனால், இந்த விவகாரத்தில் (வெள்ளை அறிக்கை) செய்யறிவு பயன்படுத்தப்படவில்லை” என்றார்.
மேலும், “அரசு செய்யறிவு கருவிகளைப் பயன்படுத்தும். நாம் தரவுகளால் இயக்கப்படும் அரசை நோக்கி நகர்கிறோம். இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக, நாங்கள் மேற்குறிப்பிட்ட செய்யறிவு கருவிகளைப் பயன்படுத்துவோம்.
இதனை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் ஏற்கெனவே ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டோம். அதில் ஈடுபட அதற்குத் தேவையான பணியாளர்களையும் அமர்த்தியுள்ளோம். ஓர் அரசு இதைச் செய்வதில் என்ன தவறு உள்ளது?” என்றார்.
AI tools in governance - Kerala Chief Minister V D Satheesan on Wednesday said his government would use Artificial Intelligence tools in governance as part of efforts to build a data-driven administration
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.