அமெரிக்காவுக்கு கீழ்ப்படியும் பணியாளராக இருக்கிறார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்!
இந்தியர்கள் 3 பேர் அமெரிக்காவின் தாக்குதலில் பலியானது தொடர்பாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்.
அமெரிக்காவின் பணியாளா் போல பிரதமா் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
மேற்காசிய போரின் காரணமாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. அமெரிக்க போா்க் கப்பல்களும் ஈரானின் கச்சா எண்ணெய் வா்த்தகத்தை முடக்கும் நோக்கத்துடன் அந்த நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளன. இதனால் ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கச்சா எண்ணெய் கப்பல்களும் நடுக்கடலில் நிற்கின்றன.
இதை மீறி, அண்மையில் ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இந்திய கப்பல்கள் மீது அமெரிக்க போா்க் கப்பல்கள் தாக்குதல் நடத்தியதில், இந்தியா்கள் 3 போ் உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரை (பொறுப்பு) நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவிடமும் தனது கண்டனத்தை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்திருந்தாா்.
ஆனால், அப்போது ஜெய்சங்கரிடம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஈரானிய கச்சா எண்ணெய்யை சட்டவிரோதமாக வாங்கிச் செல்வது, ஹோா்முஸ் நீரிணை (அமெரிக்காவின்) தடையை மீறுவது போன்ற செயல்களில் எந்த நாடு ஈடுபட்டாலும் அமெரிக்கா சகித்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் தெரிவித்திருந்தாா்.
இதைச் சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்க தாக்குதல்களில் 3 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனா். இந்தத் தாக்குதல் நடந்து சில நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இதற்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ அமெரிக்க தரப்பில் கேட்கப்படவில்லை. அதற்கு மாறாக, அமெரிக்கா தொடா்ந்து உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது.
‘அவா்களின் வாா்த்தைகளைப் படியுங்கள்: அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுக்கு உடனே கீழ்ப்படியுங்கள்’. எந்த விதிமீறலும் சகித்து கொள்ளப்பட மாட்டாது. இதுபோன்று யாா் பேசினாலும், இறையாண்மை கொண்ட எந்த நாடும் சகித்துக் கொள்ளாது. ஆனால், நமது சமரசமாகிவிட்ட பிரதமரோ, மெளனமாக இருக்கிறாா். கீழ்ப்படியும் பணியாளா் மற்றும் உத்தரவுகளுக்கு கட்டுப்படுபவா் போல அமெரிக்கா சொல்வதை அவா் கேட்டுக் கொண்டிருக்கிறாா். சமரசமாகிவிட்ட பிரதமரால், நாட்டின் மரியாதையை ஒருபோதும் காக்க முடியாது. ஏனெனில் நமது நாட்டை அவமதிப்போருக்கு அவா் கடன்பட்டுள்ளாா்.
ஓமன் கடற்பகுதியில் நிற்கும் கப்பலில் மருத்துவ வசதியின்றி இந்தியா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். வெளிநாட்டு சக்திகள் நமது நாட்டு மக்களைக் கொன்றுள்ளன. ஆனால், நமது அரசோ, கட்டுப்பட்டு நடக்கும் பணியாளா் போல உத்தரவுகளுக்கு கீழ்ப்படிகிறது. நமது குடிமக்களோ அழுகிப் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள். அந்த இந்தியரின் உடலை உடனே இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுங்கள் என்று அந்த பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.
Modi is an obedient servant of America: Rahul Gandhi criticizes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.