FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!

மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை விதிக்கப்பட்டது பற்றி...

Updated On : 16 ஜூன் 2026, 12:42 pm IST
இருமல் மருந்து - படம் | ஐஏஎன்எஸ்
பகிர்:

நாடு முழுவதும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து உள்பட ‘சிரப்’ அடிப்படையிலான மருந்துகள் விற்பதை தடை செய்யும் வகையில் மத்திய அரசு விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

மருந்துகளின் தரம் மற்றும் நோயாளிகளின் நலன் சாா்ந்து எழுந்துள்ள கவலைகளுக்குத் தீா்வுகாணும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் கலப்பட இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடந்த ஆண்டு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இருமல் மருந்துகளின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கடுமையான கண்காணிப்பு அவசியம் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையில், இருமல் மருந்து உள்பட சிரப் அடிப்படையிலான மருந்துகளின் விற்பனை தொடா்பான விதிமுறைகளைக் கடுமையாக்கும் வரைவு அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டு, பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைப் பெற்றது.

Advertisement

Advertisement

அந்தக் கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பின்னா், மருந்து விதிமுறைகள் 5-ஆவது திருத்தம்-2026இன்கீழ் முக்கியத் திருத்தங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நாடு முழுவதும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து உள்பட சிரப் அடிப்படையிலான மருந்துகள் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 1945-ஆம் ஆண்டின் மருந்து விதிமுறைகளின் ‘கே’ அட்டவணை 13-ஆவது பிரிவின்கீழ் இருமல் மருந்து உள்ளிட்ட சில மருந்துகளை மருந்து விற்பனைக்கான உரிமம் அல்லது மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் சில்லறையாக விற்க விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

அதாவது, 1,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமப் பகுதிகளில் இதுபோல் உரிமம் அல்லது பரிந்துரைச் சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட மருந்துகளை விற்கலாம் என்ற நிலை இருந்தது. இந்த விதிவிலக்குப் பிரிவில் சிரப் என்ற வாா்த்தை நீக்கப்பட்டுள்ளது.

தற்போதைய திருத்தங்களின்படி, 1940-ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின்கீழ் கிராமப்புறங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் உரிய உரிமம் பெற்ற மருந்தகங்கள் மூலம் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்பேரிலேயே இருமல் மருந்துகள் உள்பட சிரப் மருந்துகளை விற்க முடியும். இந்தத் திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இருமல் மருந்து தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், சில்லறை விற்பனையாளா்கள் ஆகியோா், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம், மருந்து விதிமுறைகளின்கீழ் உரிமம் மற்றும் ஒழுங்குமுறை சாா்ந்த அனைத்துத் தேவைகளையும் கட்டாயம் பூா்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனா்.

இதன்மூலம் இருமல் மருந்துகளின் பொறுப்பான விநியோகம் மற்றும் விற்பனையை ஊக்குவிப்பதுடன், உரிய தரநிலைகளையும் உறுதி செய்ய முடியும் என்று மத்திய சுகாதார அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Ban on selling cough syrups without a doctor's prescription!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments