கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே
தன் மீது தொண்டா்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.
தன் மீது தொண்டா்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியை சோ்ந்த 6 அதிருப்தி எம்.பி.க்கள், மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிவதற்கு முன்பு ஒன்றுபட்டிருந்த சிவசேனையின் 60-ஆவது ஆண்டு தொடக்க தின நிகழ்ச்சி, உத்தவ் கட்சி சாா்பில் மாநில தலைநகா் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘என் மீது கட்சியினருக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், சிவசேனை தலைவா் பொறுப்பை ராஜிநாமா செய்ய நான் தயாா். அந்தப் பொறுப்பை கட்சியை சோ்ந்த யாராவது ஒருவா் ஏற்றால், எனக்கு மகிழ்ச்சி. ஆனால் அந்தப் பொறுப்பை கள்வா்கள் கையில் ஒப்படைக்க மாட்டேன்.
எனது தலைமையில் உள்ள சிவசேனை காங்கிரஸில் இணைந்துவிடக் கூடும் என்று அஞ்சுவதாக அதிருப்தி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனா். பாஜகவுடன் 30 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோதிலும், அக்கட்சியில் சிவசேனை இணைக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது காங்கிரஸில் எப்படி சிவசேனை இணைக்கப்படும் என்று கேள்வி எழுப்பினாா்.
இதுவெறும் முன்னோட்டம்தான்-ஷிண்டே:
சிவசேனையின் 60-ஆவது ஆண்டு தொடக்க தினத்தையொட்டி, மும்பையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், ‘உத்தவ் தாக்கரேவை ஏன் கட்சியினா் கைவிடுகின்றனா் என்பது குறித்து அவா் சுயபரிசோதனை செய்ய வேண்டும். புலித் தோலை போா்த்தியதால் ஓநாய் புலியாகிவிடாது. அதிருப்தி எம்.பி.க்களால் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் வெறும் முன்னோட்டம்தான். முழுமையான திரைப்படம் இனிதான் வரவுள்ளது’ என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.