ஜப்பான் பிரதமா் தகாய்ச்சி இன்று இந்தியா வருகை- பிரதமருடன் பேச்சு நடத்துகிறாா்
ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இந்தியாவில் புதன்கிழமை (ஜூலை 1)முதல் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இந்தியாவில் புதன்கிழமை (ஜூலை 1)முதல் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
இந்தப் பயணத்தின்போது, பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.
இது தொடா்பாக, ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘இந்தியாவில் ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரை பிரதமா் சனே தகாய்ச்சி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். சுதந்திரமான, வெளிப்படையான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை சாத்தியமாக்க உயா் முக்கியத்துவம் அளித்து, இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமா் மோடியின் ஜப்பான் பயணத்தின்போது அறிவிக்கப்பட்ட அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்தியா-ஜப்பான் கூட்டு தொலைநோக்குப் பாா்வையின்கீழ் பரஸ்பர பலனளிக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசிக்கவுள்ளனா். பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்து விவாதிப்பதுடன், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் தொடா்பாகவும் கருத்துகளைப் பரிமாற உள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமா் மோடியை சனே தகாய்ச்சி வியாழக்கிழமை (ஜூலை 2) சந்தித்துப் பேசவுள்ளாா். கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமா் மோடி ஜப்பான் பயணித்தபோது, இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 ட்ரில்லியன் யென் (ரூ.5.82 லட்சம் கோடி) முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவித்தது. இந்தியாவும், ஜப்பானும் சிறப்பு உத்திசாா் உலகளாவிய கூட்டுறவைக் கொண்டுள்ளன. வா்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, தூய எரிசக்தி, வளரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.