கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!
கேரளத்தில் தவெக சார்பில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது குறித்து...
கேரளத்திலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான கூட்டம் திருச்சூரில் இன்று (மே 17) நடைபெற்றது.
இதில், கேரளத்திலுள்ள தவெக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும் உறுப்பினர்கள் சேர்க்கையிலும் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவரின் கீழ் 9 பேர் கொண்ட அமைச்சரவையையும் அமைத்துள்ளார். எஞ்சிய துறைகளில் விரைவில் அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தமிழ்நாட்டில் பெரும்பாலும் ரசிகர்களின் வாக்குகளை விஜய் கவர்ந்துள்ளார்.
Advertisement
ஆட்சி பொறுப்பேற்றதும் அதிரடி திட்டங்களை அறிவித்து, அதிடுத்தடுத்த நடவடிக்கைகளில் முதல்வர் விஜய் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கேரளத்திலும் தவெகவின் விரிவாக்கத்தை அவர் தொடங்கியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் மாவட்ட அளவிலான கூட்டம் தவெக சார்பில் நடத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் தவெகவுக்கு மாவட்ட அளவில் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் இளைஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தின் ஒரு பகுதியாக உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசன் முதல்வராக நாளை (மே 18) பொறுப்பேற்கவுள்ள நிலையில், தவெகவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.