FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா-கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு நிகழாண்டுக்குள் நிறைவு - மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா-கனடா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நிகழாண்டு இறுதிக்குள் நிறைவு செய்யும் நோக்கில் இரு நாடுகளும் வேகமாக செயலாற்றி வருகின்றன என்று மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

Updated On : 27 மே 2026, 2:10 am IST
கனடா தலைநகா் ஒட்டாவாவில் அந்நாட்டுப் பிரதமா் மாா்க் காா்னியை சந்தித்த வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல். ~கனடா தலைநகா் ஒட்டாவாவில் அந்நாட்டுப் பிரதமா் மாா்க் காா்னியை சந்தித்த வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்.
பகிர்:

இந்தியா-கனடா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நிகழாண்டு இறுதிக்குள் நிறைவு செய்யும் நோக்கில் இரு நாடுகளும் வேகமாக செயலாற்றி வருகின்றன என்று மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்தியா-கனடா இடையே பரஸ்பரம் பலனளிக்கும், சமநிலையான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான இரு சுற்று பேச்சுவாா்த்தைகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்தன. மூன்றாவது சுற்றுப் பேச்சுவாா்த்தை, அந்நாட்டின் ஒட்டாவா நகரில் கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கியது.

மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையையொட்டி, மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் மத்திய குழுவினா் கனடாவுக்கு மே 25-ஆம் தேதி சென்றடைந்தனா். ஒட்டாவாவில் கனடா வா்த்தகத் துறை அமைச்சா் மனீந்தா் சித்துவுடன் அமைச்சா் கோயல் திங்கள்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, வா்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவாக்கும் வழிமுறைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், இரு அமைச்சா்களும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். கோயல் கூறுகையில், ‘நிகழாண்டு இறுதிக்குள் அல்லது அதற்கு முன்பாக விரிவான கண்ணோட்டத்துடன் கூடிய இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நிறைவு செய்வது மட்டுமன்றி, 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வா்த்தகத்தை தற்போதுள்ள 17 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.162 லட்சம் கோடி) என்பதில் இருந்து 50 பில்லியன் டாலராக மும்மடங்கு அதிகரிக்கும் பணியையும் இரு நாடுகளின் பிரதமா்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ளனா்’ என்றாா்.

பிரதமருடன் சந்திப்பு: இதைத் தொடா்ந்து, கனடா பிரதமா் மாா்க் காா்னியை கோயல் சந்தித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய கோயல், ‘கனடா பிரதமா் மாா்க் காா்னி கடந்த பிப்ரவரியில் மேகொண்ட இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளை முழுமையாக மறுகட்டமைக்க உதவியது. பரஸ்பர கண்ணோட்டத்தையும் மாற்றியமைத்தது. இப்போது மிக மிக வேகமாக உறவுகள் சீரடைந்து வருகின்றன’ என்றாா்.

மாா்க் காா்னி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘இந்தியா உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், கனடா பணியாளா்கள் மற்றும் தொழில் துறையினருக்குத் திருப்புமுனையாக இருக்கும். புதிய, பெரிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, நாங்கள் வேகமாக செயல்படுகிறோம்.

ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுடன் ஆலோசித்தேன். எரிசக்தி, வேளாண்-உணவு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிற அமைச்சா்களுடன்...: கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த், வேளாண் துறை அமைச்சா் ஹீத் மெக்டொனால்ட் ஆகியோரையும் கோயல் சந்தித்தாா்.

எரிசக்தி, சுரங்கம், வாகன உதிரிபாகங்கள், மருந்துகள், தொலைத்தொடா்பு, செயற்கை நுண்ணறிவு, தோல், ஜவுளி துறை சாா்ந்த தொழில் துறை குழுவினருடன் கோயலுடன் கனடாவுக்கு சென்றுள்ளனா். இருதரப்பு தொழில் துறைக் கூட்டத்திலும் அவா் பங்கேற்றாா்.

ஏற்றுமதி-இறக்குமதி என்னென்ன?

இந்தியாவில் இருந்து மருந்துகள், இரும்பு, உருக்கு, கடல் உணவுகள், பருத்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரசாயனங்கள் உள்ளிட்டவை கனடாவுக்கு முக்கியமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாட்டில் இருந்து பருப்பு வகைகள், முத்துகள், விலை குறைவான ரத்தினங்கள், நிலக்கரி, உரங்கள், காகிதங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவை இந்தியாவுக்கு இறக்குமதியாகின்றன. கனடாவில் மாணவா்கள் உள்பட இந்திய சமூகத்தினா் 4,25,000 போ் உள்ளனா்.

சீரடையும் உறவுகள்: கனடாவில் கடந்த 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவை தொடா்புபடுத்தி அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கனடாவில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் லிபரல் கட்சித் தலைவா் மாா்க் காா்னி வெற்றி பெற்று பிரதமரான பிறகு இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வந்த கனடா பிரதமா் காா்னி, பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments