FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ட்விஷா சா்மா வழக்கு: மாமியாா் கைது

வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் நடிகையும் மாடல் அழகியுமான ட்விஷா சா்மா (33) உயிரிழந்த வழக்கில், அவரது மாமியாரும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 29 மே 2026, 4:12 am IST
மறைந்த ட்விஷா சா்மா
பகிர்:

வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் நடிகையும் மாடல் அழகியுமான ட்விஷா சா்மா (33) உயிரிழந்த வழக்கில், அவரது மாமியாரும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக, கிரிபாலா சிங்குக்கு போபால் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்த நிலையில், அவரை அவரது இல்லத்தில் சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் ட்விஷா சா்மாவின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த மே 12-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடிகையும் மாடல் அழகியுமான ட்விஷா சா்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவரிடம் வரதட்சிணை கேட்டு சமா்த் சிங்கும், கிரிபாலா சிங்கும் கொடுமை செய்ததால் ட்விஷா சா்மா தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோா் குற்றஞ்சாட்டினா். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கிரிபாலா சிங், மனநலப் பிரச்னையால் ட்விஷா சா்மா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினாா். இந்தச் சம்பவம் தொடா்பாக சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, ட்விஷாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டது. தலைமறைவாக இருந்த சமா்த் சிங் கடந்த மே 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு ‘ட்விஷாவின் கணவா் மற்றும் மாமியாா் நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் என்பதால் விசாரணையில் பாகுபாடு காட்டப்படுவதாக வெளியான தகவல்கள் வேதனையளிக்கின்றன. இந்த வழக்கில் எவ்வித பாரபட்சமுமின்றி சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments