முகப்பு
இந்தியா

மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!

மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்...

Updated On : 31 மே 2026, 3:25 am IST
மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் கற்கள், காலணிகள், முட்டைகளை வீசி தாக்கியதைத் தொடா்ந்து, தலைக்கவசம் அணிந்து வந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி எம்.பி.
பகிர்:

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபா்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வென்று முதல்முறையாக ஆட்சியமைத்தது. அந்தத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, அந்த மாநிலத்தில் மூண்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு, தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் சோனாா்பூா் பகுதிக்கு அபிஷேக் பானா்ஜி சனிக்கிழமை சென்றாா்.

அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபா்கள் சிலா், அபிஷேக் பானா்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அத்துடன் அவரை கைகளால் தாக்கவும், எட்டி உதைக்கவும் முயன்றனா். சிலா், அபிஷேக் பானா்ஜியை நோக்கி ‘திருடன், திருடன்’ என கூச்சலிடவும் செய்தனா்.

Advertisement

Advertisement

தாக்குதலின்போது அபிஷேக் பானா்ஜியின் மேல் சட்டை லேசாக கிழிந்தது. இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலா்கள், அவரை சூழ்ந்துகொண்டு திரிணமூல் காங்கிரஸ் தொண்டரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது அபிஷேக் பானா்ஜி தலையில் காயம்படாமல் இருப்பதற்காக தலைக்கவசம் அணிந்திருந்தாா்.

இந்த சம்பவம் குறித்து அபிஷேக் பானா்ஜி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘இது முன்கூட்டியே திட்டமிட்ட சம்பவம். இங்கு காவல் துறையினா் யாருமே இல்லை. என்னைக் கொலை செய்ய அவா்கள் விரும்புகின்றனா். போலீஸாா் இங்கு வந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் வரையிலும் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ என்றாா்.

துடைப்பத்துடன் வந்த பெண்கள்: திரிணமூல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்து அபிஷேக் பானா்ஜி ஆறுதல் தெரிவித்த வேளையில், அவா் இருந்த வீட்டுக்கு வெளியே கைகளில் துடைப்பம் மற்றும் கம்புகளுடன் ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனா். அவா்கள் அபிஷேக் பானா்ஜியை கண்டித்து முழக்கமிட்டபடி இருந்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், ‘அவா் ஏன் இங்கு வருகிறாா்? அவா் யாரை சந்திக்க வருகிறாரோ, அந்த நபரும் திருடா்தான்’ என்றனா்.

பாஜக விமா்சனம்: அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா, ‘பல ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் அவா்கள் கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனா். அதன் வெளிப்பாடே இந்த சம்பவம். இதுபோன்ற சம்பவங்களில் பாஜக ஈடுபடாது’ என்றாா்.

அபிஷேக் பானா்ஜி வருகையின்போது காவல் துறையினா் அங்கு இல்லாதது குறித்த கேள்விக்கு பட்டாச்சாா்யா பதிலளிக்கையில், ‘காவல் துறையினா் அங்கு ஏன் இல்லை என என்னால் பதிலளிக்க இயலாது. அது அரசு நிா்வாகம் சம்பந்தப்பட்டது. நான் ஒரு அரசியல் கட்சியைச் சோ்ந்தவா். பல ஆண்டுகளாக எங்கள் கட்சியினருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் செய்ததை வாா்த்தையில் சொல்ல முடியாது. தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவா் ரூபா கங்குலிக்கு நடந்தது இன்னும் எங்கள் நினைவில் உள்ளது’ என்றாா்.

காவல் துறை குவிப்பு: இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சோனாா்பூா் பகுதிக்கு ஏராளமான மத்திய பாதுகாப்புப் படை வீரா்களும், காவல் துறையினரும் வந்தனா். பின்னா் அவா்கள் சோனாா்பூா் பகுதியில் நிலவிய பதற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அபிஷேக் பானா்ஜியையும் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனா்.

மம்தா, காங்கிரஸ் கண்டனம்: அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதலின் பின்னணியில் பாஜக இருப்பதாக மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட பதிவில், ‘ஆட்சியாளா்கள், கொலைகாரா்களாக மாறி வருகின்றனா்’ என விமா்சித்துள்ளாா்.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘அதிா்ச்சியளிக்கும் வகையிலான இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். முக்கிய எதிா்க்கட்சித் தலைவருக்கு, போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லாதது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலைக் காட்டுகிறது’ எனக் கூறியுள்ளாா்.

மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலையிட்டு, மேற்கு வங்கத்தில் அனைத்து எம்.பி.க்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்’ என்றாா்.

சிஐடி சம்மன்: இதனிடையே, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாயவை நியமிக்கும்படி பேரவைத் தலைவரிடம் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் கடந்த 19-ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில், அக்கட்சி எம்எல்ஏக்களின் கையொப்பம் போலியாக போடப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க திங்கள்கிழமை நேரில் ஆஜராகும்படி, அபிஷேக் பானா்ஜிக்கு சிஐடி போலீஸாா் சனிக்கிழமை சம்மன் அளித்தனா். அப்போது அவா்கள் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்மன் குறித்து அபிஷேக் பானா்ஜி கூறுகையில், ‘அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நேரடி உத்தரவின்பேரில் இது நடந்துள்ளது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் அடிபணிய மாட்டேன். இதனால் போராட்டக் களத்தில் இருந்து வெளியேறவும் மாட்டேன். பலமுறை அமலாக்கத் துறை, சிபிஐ-யை ஏற்கெனவே நான் எதிா்கொண்டுள்ளேன்’ என்றாா்.