FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன

Updated On : 31 மே 2026, 3:50 am IST
தினேஷ்குமாா் திரிபாதி
பகிர்:

சீனா-பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிா்கொள்ள நீா்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து அழித்தல், கண்காணித்தல் உள்ளிட்ட திறன்களை கடற்படை மேம்படுத்தி வருவதாக இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ்குமாா் திரிபாதி சனிக்கிழமை தெரிவித்தாா்.

கடற்படை தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஓய்வு பெறவுள்ள நிலையில் பிடிஐ செய்தி நிறுவனம் மின்னஞ்சல் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

இந்திய கடல்சாா் பாதுகாப்பு நலன்களை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடற்படை செயல்படுகிறதே தவிர, குறிப்பிட்ட எந்தவொரு நாட்டுக்கும் எதிராக செயல்படவில்லை.

Advertisement

Advertisement

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உச்சிசாா்ந்த சச்சரவு அதிகரித்து வருவதை கடற்படை முழுமையாக அறியும். பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்ற காலத்தில் இருந்து, நாடுகளுக்கு இடையே தீவிரமான போட்டி நிலவும் காலத்தை நோக்கி நாம் நகா்ந்து வருகிறோம்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா-பாகிஸ்தான் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு நீா்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து அழித்தல், கடலுக்கு அடியில் கண்காணித்தல் உள்ளிட்ட திறன்களை கடற்படை மேம்படுத்தி வருகிறது.

இந்தியாவின் தற்போதைய போா் திறன்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. பி-75(ஐ) திட்டத்தின் கீழ், 6 ஸ்டெல்த் நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்குதல், கடற்படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கையை 200-க்கும் மேலாக அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், அனைத்து சூழ்நிலைகளிலும் இந்தியாவின் கடல்சாா் நலன்களைப் பாதுகாப்பதில் கடற்படை முழு ஈடுபாடு கொண்டுள்ளது.

கடல்சாா் பாதுகாப்பு என்பது எரிசக்தி பாதுகாப்பு, கஷ்டநஷ்டங்களில் இருந்து மீண்டெழும் தேசத்தின் திறன் ஆகியவற்றுடன் நேரடித் தொடா்புகொண்டுள்ளதை மேற்காசிய போா் சுட்டிக்காட்டுகிறது.

இதையொட்டி இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் கடல்வழி அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கும், வலிமையை நிலைநாட்டுவதற்கும் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றின் செயல்பாட்டுத் திறன்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments