உ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே
வாக்குத் திருட்டு மூலம் மத்தியில் பாஜக, ஆட்சி அமைத்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளது குறித்து...
வாக்குத் திருட்டு மூலம் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (நவ. 1) விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன
இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (நவ. 1) நடைபெற்றது.
Advertisement
Advertisement
நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது.
ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக மேடையில் தோன்றி மக்கள் முன்பு உரையாற்றினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேடையில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
''பாஜகவினருக்கு வாக்களித்தவர்கள் யார்? அவர்களை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டனர். மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கவில்லை. தற்போதுள்ள மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் வாக்குத் திருட்டு மூலம் அமைந்ததே. ஏன்? பிகார், உத்தரப் பிரதேச அரசு கூட வாக்குத் திருட்டு மூலம் அமைந்ததுதான். இந்த திருடர்களை நாம் நீக்க வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே ஜனநாயகம் காக்கப்படும். ஜனநாயகத்தை காப்பாற்ற மோடியை நாம் நீக்க வேண்டும்'' என மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார்.
BJP in power in UP and Bihar through vote theft! – Mallikarjun Kharge
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.