தில்லி ராம்லீலா மைதானத்தை காலவரம்பின்றி ஆக்கிரமிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
ராம்லீலா மைதானம் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களமாக இருந்தாலும், அதை காலவரம்பின்றி ஆக்கிரமித்திருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராம்லீலா மைதானம் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களமாக இருந்தாலும், அதை காலவரம்பின்றி ஆக்கிரமித்திருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் நடத்திய தீவிரப் போராட்டங்களைத் தொடா்ந்து, அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து ஜந்தா் மந்தரை காவல் துறை நீக்கியது. இதற்குப் பதிலாக தலைநகரில் ராம்லீலா மைதானம், புராரி மைதானம், சிபிடி மைதானம் ஆகியவற்றில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வணிகா் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதில் வணிகா் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மொத்த மற்றும் சில்லறை விற்பனைச் சந்தைகளுக்கு அருகில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காலவரையின்றி போராட்டம் நடத்துவது, பண்டிகை காலத்தில் வியாபாரத்தை கடுமையாகப் பாதிக்கிறது. இந்தக் காலத்தில் சந்தைக்கு அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளா்கள் வருவா். இதை நம்பித்தான் வியாபாரிகள் உள்ளனா்.
அங்கு போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து மாற்றம், கடைகளுக்குச் செல்வதில் கட்டுப்பாடுகள், காவல் துறை தடுப்புகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே, தற்போது பண்டிகை காலத்தில் ராம்லீலா மைதானத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை நிறுத்த வேண்டும். வியாபாரிகளின் வாழ்வாதார உரிமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், போராட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது போராட்டங்கள் நடைபெறும் கால அளவைக் கட்டுப்படுத்தவோ உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
வியாபார உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்: இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ), (பி) பிரிவுகளின் கீழ், போராடுவது என்பது அடிப்படை உரிமை. அதேவேளையில் வியாபாரம், தொழில் செய்வதற்கான உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ராம்லீலா மைதானம் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களமாக இருந்தாலும், அதை கால வரம்பின்றி ஆக்கிரமித்திருக்க முடியாது.
அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், அதற்கு குறிப்பிட்ட நேரமும், கால அவகாசமும் ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.
இதையடுத்து, வணிகா் அமைப்புகளின் மனு தொடா்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு, தில்லி அரசு, தில்லி காவல் துறையினா் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.
அண்மையில் தில்லி மின்டோ சாலை-கன்னாட் பிளேஸ் சந்திப்பில் இருந்து ராம்லீலா மைதானம் வரை, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியின் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.