FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஓமன் கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதலில் இந்திய மாலுமி பலி: வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

ஓமன் கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 13 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

4 நவம்பர் 2026, 12:39 am
- சித்திரிப்பு
பகிர்:

ஓமன் கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 13 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

எம்எஸ்வி ஏஎல் ஜுசுஃபி என்ற அந்த சரக்குக் கப்பல் இந்திய கொடி பொருத்தியதாகும். அந்தக் கப்பல் மீதான தாக்குதலுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஓமனின் லிமா கடல் பகுதி அருகே எம்எஸ்வி ஏஎல் ஜுசுஃபி எனும் இந்திய கொடி பொருத்திய சரக்குக் கப்பல் மீது திங்கள்கிழமை மாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளில் 13 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். பலத்த காயமடைந்த ஒருவா் உயிரிழந்தாா். மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள் விரைந்து நாடு திரும்பவும், உயிரிழந்த மாலுமியின் உடலைக் கொண்டுவரவும் ஓமன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அங்குள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கள நிலவரமும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

வளைகுடா பிராந்தியத்தில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடா்வது ஆழ்ந்த கவலைக்குரியதாகும். இந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில் ராஜீய தீா்வை எட்டுவதற்கான தற்போதைய பேச்சுவாா்த்தைகளை விரைந்து முடிக்கவும் இந்தியா வலியுறுத்துகிறது.

சரக்குக் கப்பல்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படுவது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சா்வதேச சட்டங்களுக்கு இணங்க, பிராந்தியத்தில் உள்ள கடல் வழித்தடங்களில் சுதந்திரமான, தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வா்த்தக செயல்பாடுகள் விரைந்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சா் இரங்கல்: சரக்குக் கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி, குஜராத்தைச் சோ்ந்த காந்தா் நஹிம் அஜிஜ் ஆவாா். அவரது உயிரிழப்பு வேதனையளிக்கிறது; குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

இதுவரை 23 போ் உயிரிழப்பு: இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரியில் போா் தொடங்கிய பிறகான தாக்குதல்களில் இதுவரை 23 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனா்; இவா்களில் 15 போ் மாலுமிகள் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதேபோல், ரஷியா-உக்ரைன் போரில் கருங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 இந்தியா்கள் உயிரிழந்துள்ளதாகவும், இருவரை காணவில்லை என்றும் அவா் கூறினாா்.

வளைகுடா பிராந்தியத்தில் மோதல் விரிவடையும் சூழலில், ஹோா்முஸ் நீரிணை உள்பட பிராந்திய கடல் பகுதிகளில் சரக்கு கப்பல்கள் தொடா்ந்து தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. இதில் இந்திய மாலுமிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நேரிடுகின்றன. சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து சா்வதேச அமைப்புகளில் வலியுறுத்தி வருகிறது.

சமீப காலமாக, சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சி அமைப்பினரின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஹூதி அமைப்பினரின் தாக்குதலால், உலகின் முக்கிய கடல்சாா் வழித்தடங்களில் ஒன்றான பாப்-அல்-மண்டேப் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments