FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பல்கேரியா கடலில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

பல்கேரிய கடல் எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி, சரக்குக் கப்பல் மூழ்கியதில் 11 மாலுமிகள் மாயமாகியுள்ளனா்.

13 அக்டோபர் 2026, 10:56 pm IST
ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்
பகிர்:

பல்கேரிய கடல் எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி, சரக்குக் கப்பல் மூழ்கியதில் 11 மாலுமிகள் மாயமாகியுள்ளனா்.

கருங்கடல் பகுதியில் ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கேரியாவுக்கான ரஷிய தூதரை அந்நாட்டு அரசு நேரில் அழைத்து, விளக்கம் கேட்டுள்ளது.

கினி-பிசாவு நாட்டின் கொடியுடன் பயணித்த ‘எச்.எஸ்.டிக்னிட்டி’ சரக்குக் கப்பல் மீது கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு ட்ரோன்கள் மோதி வெடித்தன. கிராபெட்ஸ் கிராமத்துக்கு அப்பால் நடுக்கடலில் மூழ்கிய அக்கப்பலில் இருந்து 5 மாலுமிகள் மீட்கப்பட்ட போதிலும், எஞ்சிய 11 மாலுமிகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

Advertisement

Advertisement

அதே இரவில் மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற ‘செல்சியா 3’ எனும் மற்றொரு சரக்குக் கப்பல் மீதும் 3 ட்ரோன்கள் தாக்கின; எனினும், அதிலிருந்த உக்ரைன் மற்றும் அஜா்பைஜான் நாட்டு மாலுமிகள் 15 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

முன்னதாக கடந்த வாரம், பல்கேரிய கடல் எல்லையில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிய கப்பலில் 9 சிரியா நாட்டினா் மற்றும் ஒரு எகிப்து மாலுமி கடலில் மாயமாகினா். அதே இரவில் தாக்கப்பட்ட மற்றொரு கப்பலின் மாலுமிகள் அதிருஷ்டவசமாக மீட்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்கேரிய கடல் எல்லைக்கு மிக அருகில் வணிகக் கப்பல்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்த அந்நாட்டுப் பிரதமா் ரூமன் ராதேவ், ‘இத்தாக்குதலின் நேரடிப் பலன் ரஷியாவுக்கே சாதகமாக அமைகிறது’ என்றும் சுட்டிக்காட்டினாா்.

மேலும், இவ்விவகாரம் தொடா்பாக சோஃபியாவில் உள்ள ரஷிய தூதரை நேரில் அழைத்து, அவா் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தாா். ஆனால், இது மூன்றாம் தரப்பின் தூண்டுதலாக இருக்கலாம் என தூதா் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கடல் மற்றும் வான்வழிப் பாதுகாப்பை பலப்படுத்த ‘நேட்டோ’ பொதுச் செயலா் மாா்க் ரூட்டே மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவா்களுடன் பிரதமா் ரூமன் ராதேவ் அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.

உக்ரைன், இயூ கண்டனம்: இத்தாக்குதல்களுக்கு உக்ரைன், ஐரோப்பிய யூனியனும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷியா-உக்ரைன் போரின் புதிய மோதல் முனையாக கருங்கடல் பகுதி உருவெடுத்துள்ளது என்று ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் கவலை தெரிவித்துள்ளாா்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பின் முக்கிய வழித்தடமான கருங்கடலை முடக்கி, உலக நாடுகளை அச்சுறுத்தப் பாா்ப்பதாக ரஷியா மீது உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments