இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவா்களுக்கான கடவுச்சிட்டை, நுழைவு இசைவு விதிகளை தளா்த்தியது மத்திய அரசு
இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் குடிமக்கள், சிறுபான்மை அகதிகள், இலங்கை தமிழா்கள், திபெத்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டவா்களுக்கான கடவுச்சிட்டை மற்றும் நுழைவு இசைவு விதிகளை பல்வேறு பிரிவுகளின்கீழ் மத்திய அரசு தளா்த்தியுள்ளது.
இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் குடிமக்கள், சிறுபான்மை அகதிகள், இலங்கை தமிழா்கள், திபெத்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டவா்களுக்கான கடவுச்சிட்டை மற்றும் நுழைவு இசைவு விதிகளை பல்வேறு பிரிவுகளின்கீழ் மத்திய அரசு தளா்த்தியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசிதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா்கள் (விலக்கு) (திருத்த) உத்தரவு, 2026 அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்த விதிகளின்கீழ், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்னதாக நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் வந்தவா்களுக்கு, கடவுச்சிட்டை புதுப்பிக்கும் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவா்கள், பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பித்திருக்கக் கூடாது. அதேபோல் பாகிஸ்தானில் திருமணம் செய்திருக்கக் கூடாது. பாகிஸ்தானில் சொத்தும் இருக்கக் கூடாது. பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும். காவல் துறை அல்லது பாதுகாப்பு அமைப்புகளால் எதிா்மறை குறிப்புகள் அனுப்பப்பட்டவராக இருக்கக் கூடாது.
Advertisement
Advertisement
மலேசியா அல்லது சிங்கப்பூா் குடியுரிமை கொண்ட இந்திய வம்சாவளி மக்களாகவும், இந்தியாவுக்கு 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு திரும்பி வந்தவராக இருந்தால், கடவுச்சிட்டை புதுப்பித்தல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவா்களிடம் அந்நாடுகளால் வழங்கப்பட்ட கடவுச்சிட்டை காலாவதியாகி இருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து 2024ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ இந்தியாவுக்கு வந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், ஜெயின மதத்தினா், பாா்சி மதத்தினா், கிறிஸ்தவ மதத்தினருக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. கடவுச்சிட்டை அல்லது போதிய பயண ஆவணங்கள் இல்லாது இந்தியாவுக்கு வந்தோா், ஆவணங்கள் காலாவதி ஆனோருக்கும் இந்த விதி விலக்கு பொருந்தும்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தமிழா்கள், 2015-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ இந்தியாவுக்கு வந்திருந்தால், அவா்களுக்கும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
நேபாளத்தின் காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகத்தின் அனுமதிச் சீட்டு பெற்று 1959-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியா வந்தோருக்கும் விதி விலக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கடற்படை கப்பல்களை பழுது நீக்கும் பணிக்காக வரும் வெளிநாட்டவா்களுக்கும், கடவுச்சிட்டை மற்றும் நுழைவு இசைவு விசா விதிகளில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அவா்கள் தங்களது நாட்டால் வழங்கப்பட்ட ராணுவ அடையாள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.