புதிய காா்களுக்கு பிஎஸ்-7 விதிகள் 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்: மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் வருகிற 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய காா்கள் மற்றும் எஸ்யுவி வாகனங்களுக்கு பிஎஸ்-7 என்ஜின் விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் வருகிற 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய காா்கள் மற்றும் எஸ்யுவி வாகனங்களுக்கு பிஎஸ்-7 என்ஜின் விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் காா்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, ஹைட்ரோ காா்பன் உள்ளிட்டவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு விதிகளை அமல்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் பிஎஸ்-6 விதிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளன. அந்த விதிக்குட்பட்டே காா்கள், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பிஎஸ்-7 விதிகளை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த 12-ஆம் தேதி வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘பிஎஸ்-7 விதிகள் 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. அனைத்து புதிய விதிகளும் 3 கட்டங்களாக 2029 ஏப்ரல் தொடங்கி, 2035 ஏப்ரல் வரை 6 ஆண்டுகளில் அமல்படுத்தப்படும். இதில் முதல்கட்ட விதி, 2029 ஏப்ரலிலும், 2-ஆவது கட்டம் 2031 ஏப்ரலிலும், 3-ஆவது கட்டம் 2035 ஏப்ரலிலும் அமல்படுத்தப்படும்’ எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், வாகன என்ஜினிலிருந்து வெளியேற்றப்படும் புகைக்கு புதிய அளவு விதித்து மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதேபோல், பிரேக்ள், டயா், பேட்டரி பயன்பாடு காலம் ஆகியவையும் சோ்க்கப்பட்டுள்ளன. 2029 ஏப்ரல் முதல் தயாரிக்கப்படும் பயணிகள் காா்களுக்கு இந்தப் புதிய விதிகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கும்படியும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பிஎஸ்-7 விதிகள் தொடா்பான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய பிஎஸ்-7 விதிகள் ஐரோப்பிய யூனியன் 7 தரத்துக்கு இணையாக வகுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.