தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைந்தால் அது அவர்களின் முடிவு, ஆனால்..! - ஃபட்னவீஸ் சூசகம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைந்தால் அவர்களின் முடிவாகவே இருக்கும் என மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் கூறியுள்ளார்...
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் மற்றும் மறைந்த அஜித் பவார் அணிகள் ஒன்றிணைவார்களா என்பது அவர்களின் முடிவு என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில், முன்னாள் முதல்வர் சரத் பவார் மற்றும் மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு வெவ்வேறு அணிகளும் ஒன்றிணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதில், அஜித் பவாரின் மனைவியும், தற்போதைய மகாராஷ்டிர துணை முதல்வருமான சுனேத்ரா பவார் அணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், சரத் பவாரின் அணி காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியிலும் இடம்பெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒன்றிணைவது அக்கட்சியின் தலைவர்களான சரத் பவார் மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோரின் முடிவு எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிப்பதால் பாஜகவுடன் ஆலோசனை மேற்கொள்வார்கள் எனவும் முதல்வர் ஃபட்னவீஸ் இன்று (நவ. 7) கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுக்க விரும்பினாலும் அது அவர்களுக்கே உரிய முடிவாக இருக்கும். ஆனால், அக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக இருப்பதால், அந்த முடிவு குறித்து நிச்சயமாக எங்களுடன் (பாஜக) ஆலோசனை மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரையில் இரண்டு அணிகளும் ஒன்றிணைவது குறித்து பாஜகவுடன் எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என முதல்வர் ஃபட்னவீஸ் விளக்கமளித்துள்ளார்.