FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2030-க்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 530 ஜிகாவாட்டை எட்டும்: சர்வதேச எரிசக்தி முகமை

உலகின் இரண்டாவது மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என சர்வதேச எரிசக்தி முகமை கூறியிருப்பது...

2030-க்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 530 ஜிகாவாட்டை எட்டும் - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2030-க்குள் சுமார் 530 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சூரிய ஒளி மின்சக்தி வழங்கும். இதன் மூலம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என சர்வதேச எரிசக்தி முகமையின் புதிய அறிக்கை தெரிவிக்கின்றன.

சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் இந்தியா தனது நிலையை மிக வேகமாக வலுப்படுத்தி வருகிறது. நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் விரிவடைந்து வருவதன் மூலம், எரிசக்தி பாதுகாப்பு மேம்படுவதுடன், இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களைச் சார்ந்திருக்கும் நிலை குறைந்து, புதிய உற்பத்தி வாய்ப்புகளும் உருவாகின்றன என்று சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கின்றன.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்தால் கிடைக்கும் பொருளாதார மற்றும் எரிசக்தி பாதுகாப்பு நன்மைகளை சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கை எடுத்துரைத்துள்ளது.

Advertisement

Advertisement

புது தில்லியில் நடைபெற்ற 'பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாட்டில்' வெளியிடப்பட்ட, சர்வதேச எரிசக்தி முகமையின் 'இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை அறிக்கை 2026'-ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்து, 2026-ல் 300 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. தற்போது, ​​உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது; மேலும், சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி தொகுதிகளைத் தயாரிப்பதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

2010-க்குப் பிறகு சூரிய ஒளி மின்சக்தி, காற்றாலை மற்றும் உயிரி எரிசக்தி திறன் இல்லையெனில், 2025-ல் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி சுமார் 110 மில்லியன் டன்கள் கூடுதலாக இருந்திருக்கும் என்று முகமை மதிப்பிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதிலும், உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கிய பங்கை இது உணர்த்துகிறது.

2030-க்குள் சூரிய ஒளி மின்சக்தி திறன் 530 ஜிகாவாட்டை எட்டும் என்றும், புதிதாக நிறுவப்படும் சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி திறன் 90 ஜிகாவாட்டை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவிலான பாரம்பரிய நீர்மின் உற்பத்தி திட்டங்கள் மற்றும் 'பம்ப்-ஸ்டோரேஜ்' திட்டங்களில் முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம், நீர்மின் உற்பத்தி திறன் 75 ஜிகாவாட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கம், 2030-க்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களிலிருந்து 500 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை எட்ட வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை அடைய உதவும். புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களிலிருந்து மின் உற்பத்தித் திறனை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது 2025-ஆம் ஆண்டிலேயே இந்தியா எட்டியுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிற புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களின் விரைவான விரிவாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

2025-இல் 49 ஜிகாவாட்டாக இருந்த ஆண்டுதோறும் சேர்க்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன், 2030 வரை தொடர்ந்து 50 ஜிகாவாட்டிற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவான வளர்ச்சிச் சூழலில், இந்த ஆண்டு கூடுதல் திறன் 70 ஜிகாவாட் வரை உயரக்கூடும்.

மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், 2025-இல் சுமார் 500 டெராவாட்-மணிநேரத்திலிருந்து, 2030-இல் சுமார் 950 டெராவாட்-மணிநேரமாக கிட்டத்தட்ட இருமடங்காகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பு, தற்போதைய சுமார் 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயரும்.

2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்புடன், சூரிய ஒளி மின்சக்தி முதன்மைப் பங்களிப்பாளராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உற்பத்தி 2025 மற்றும் 2030-க்கு இடையில் மும்மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சுமார் 50 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.

போட்டிகள் நிறைந்த ஏலங்கள், ஆதரவான கொள்கைக் கட்டமைப்புகள், குறைந்து வரும் தொழில்நுட்பச் செலவுகள் மற்றும் வணிக, தொழில்துறை நுகர்வோரிடமிருந்து அதிகரித்து வரும் தேவை ஆகியவையே இந்த விரிவாக்கத்திற்குக் காரணம் என்று அந்த முகமை கூறியுள்ளது.

இருப்பினும், இந்த வளர்ச்சிப் பாதையைத் தக்கவைப்பதற்கு மின் பரிமாற்றத்தை விரைவுபடுத்துதல், ஆற்றல் சேமிப்பு வசதிகளை நிறுவுதல் மற்றும் மின் அமைப்பில் மேம்பட்ட நெகிழ்வுத்தன்மை ஆகியவை தேவைப்படும். நிலம் கையகப்படுத்துதல், திட்டச் செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் விநியோக நிறுவனங்களின் நிதி நிலை ஆகியவையும் முக்கியமான சவால்களாக உள்ளன.

இந்தத் தடைகளைச் சமாளிப்பதன் மூலம், 2026-2030 காலகட்டத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைப் பயன்படுத்துவதை 20%-க்கும் மேலாக விரைவுபடுத்த முடியும் என்று சர்வதேச எரிசக்தி முகமை கூறியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இந்த வளர்ச்சியால், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையில் 240 பில்லியன் அமெரிக்க டாலர் வரை மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை விரைவாகச் செயல்படுத்தியதன் மூலம், பொருளாதார ரீதியாகவும் எரிசக்தி பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியா குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற்றுள்ளது. 2011 முதல் 2025 வரையிலான காலத்தில், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மூலம் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான செலவில் இந்தியா 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைச் சேமித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த சேமிப்புத் தொகை, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இருமடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் குறிப்பிடத்தக்க எரிசக்தி பாதுகாப்பு நன்மைகளை வழங்கி வருவதாக சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குநர் ஃபாத்திஹ் பிரோல் கூறினார்.

மேலும், இந்தியாவின் இந்த அனுபவம், நிலையான மற்றும் சீரான கொள்கை நடவடிக்கைகள் எவ்வாறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செலவுகளைக் குறைத்து, முதலீடுகளை ஈர்த்து, இதர வளர்ந்து வரும் பிற பொருளாதாரங்களுக்குப் பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்திருப்பது, கடந்த சில ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையே காட்டுகிறது என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

India's renewable energy capacity is projected to reach around 530 GW by 2030, with solar photovoltaic (PV) accounting for more than 80% of the expansion...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.