கார்கேவின் தீபாவளி வாழ்த்து சர்ச்சை: பாஜக கடும் விமர்சனம்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தீபாவளி வாழ்த்துப் பதிவு சர்ச்சையாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தீபாவளி வாழ்த்துப் பதிவு சர்ச்சையாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த பதிவில், "மகிழ்ச்சியின் ஈத்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஈத் என்பது இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளைக் குறிக்கும் வார்த்தை என்பதைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் அவரது பதிவை விமர்சித்து வருவது சர்ச்சையாகியுள்ளது.
அவரது பதிவில், “தீபாவளி என்பது மகிழ்ச்சியின் பண்டிகை. ஒளித் திருநாளான தீபாவளி அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய சகோதரத்துவத்தின் கொண்டாட்டம். அனைத்து சமூகங்களின் பண்டிகைகளும் மக்களை ஒன்றிணைக்கின்றன. இந்த பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தி, மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தவும், சமூகப் பிளவுகளை நீக்கவும் முன்வர வேண்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
அதில், ஈத் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டது எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஈத் என்ற சொல், மகிழ்ச்சியைக் குறிக்கும் என்ற பொதுவான பொருளிலேயே கார்கே அதனைப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தெரிவித்தனர்.
ஆனால், பாஜக சார்பில் கார்கே பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் இவ்வாறு செய்வதாகவும், சனாதனத்திற்கு எதிராக அவர்கள் நடந்துகொள்வதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
வதோதரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் இளைஞர் பிரிவின் தேசியத் தலைவருமான ஹேமங் ஜோஷி கார்கேவின் கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், "கார்கே அவர்களே. தீபாவளியை 'மகிழ்ச்சியின் ஈத்' என்று கூறியிருக்கிறீர்கள்; அப்படியானால், ராகுல் காந்தி 'புதிய இந்தியாவின்' மிர் ஜாஃபரா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக ஐஎம்ஐஎம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான் கருத்து தெரிவிக்கையில், கார்கேவை கடுமையாகச் சாடினார். இது குறிப்பிட்ட வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதற்கான அரசியல் தந்திரம் என்று அவர் விமர்சித்துள்ளார்.