சிறுவனைக் கொன்று உடல் உறுப்புகளை இணையம் மூலம் விற்க முயன்ற நபர் கைது!
உறவினரின் மகனைக் கொன்று உடல் உறுப்புகளை இணையம் மூலம் விற்க முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
உறவினரின் மகனைக் கொன்று உடல் உறுப்புகளை இணையம் மூலம் விற்க முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த பாசுதேவ் (27) என்ற நபர், தனது உறவினரின் 4 வயது மகனைக் கொன்று சிறுவனின் சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கண்களை அகற்றி அவற்றை இணையத்தில் விற்க முயற்சித்துள்ளார்.
சிறுவனின் தந்தை ராம்ஜீத் ராம் (36), தனது மகன் ஜிதேந்திர ராமை நவம்பர் 5 முதல் காணவில்லை என்று சன்னா கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாசுதேவ் சிறுவனைக் கடத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் ஜஷ்பூர் மாவட்டத்தின் லோதேனபத் மஹுவா கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியின் பள்ளத்தில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவனின் தந்தையான ராம்ஜீத், வேலை தேடி சுமார் ஓராண்டுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சன்னா கிராமத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளார். ஆமட்சுவா நதி அணைக்கு அருகில் ஒரு குடிசையில் வசித்து வந்த இவரது குடும்பத்தினரை உறவினரான பாசுதேவ் அடிக்கடி சந்திக்க வருவார் என கூறப்படுகிறது.
சிறுவன் காணாமல் போன நாளில் குடும்பத்தினருடன் இணைந்து பாசுதேவும் சிறுவனைத் தேடுவது போன்று நடித்துள்ளார். சிறுவனின் உடல் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதுதொடர்பான விசாரணையில் பாசுதேவை காவல்துறையினர் கைது செய்ததாக ஜஷ்பூர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் லால் உமேத் சிங் தெரிவித்தார்.
விசாரணையின் போது, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த நபர், கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம் போதவில்லை என்பதால் அதிக பணம் சம்பாதிக்க விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
விரைவில் பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி சமூக ஊடகங்களில் தேடியபோது சிறுவர்களின் உடல் உறுப்புகளை விற்கலாம் என்ற தகவலை அவர் பெற்றதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து, சிறுவனை இறைச்சி வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று மது அருந்த வைத்துள்ளார்.
சிறுவன் போதையில் தூங்கிய பின்னர், கத்தியால் அவனைக் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும், சிறுவனின் சிறுநீரகங்கள், நுரையீரல்கள் மற்றும் கண்களை அகற்றி அவற்றைப் பிளாஸ்டிக் வாளியில் தனியே எடுத்து, உடலை தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் தள்ளி மண்ணைப் போட்டு மூடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது தகவலின் அடிப்படையில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பொருள்களை காவல்துறையினர் மீட்டனர். இதுதொடர்பாக, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.