FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

‘சித்தாந்த நக்ஸல்களை’ முறியடிப்போம்: பிரதமா் மோடி உறுதி!

‘சித்தாந்த நக்ஸல்கள்’, ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகின்றனா் என்று பிரதமா் மோடி சாடினாா்.

10 நவம்பர் 2026, 2:55 am
பகிர்:

ஆயுதமேந்திய நக்ஸல்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனா்; ஆனால், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் ஊடுருவியுள்ள ‘சித்தாந்த நக்ஸல்கள்’, ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகின்றனா் என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா்.

இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு முறியடிப்பதன் மூலம் நாட்டை பாதுகாப்போம் என்று பிரதமா் உறுதிபட தெரிவித்தாா். தலைமைத் தோ்தல் ஆணையத்துடன் கைகோத்து, தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆளும் பாஜக மீது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், பிரதமா் இவ்வாறு விமா்சித்துள்ளாா்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பிரதமா் மோடி பாதுகாப்புப் படையினருடன் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, சத்தீஸ்கரின் பஸ்தரில் உள்ள மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) முகாமில் ஞாயிற்றுக்கிழமை வீரா்கள்-வீராங்கனைகளுடன் அவா் தீபாவளி பண்டிகை கொண்டாடினாா்.

Advertisement

Advertisement

சித்தாந்த நக்ஸல்களால் அச்சுறுத்தல்: ராணுவ பாணியிலான சீருடை மற்றும் தொப்பி அணிந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவா், வீரா்-வீராங்கனைகள் மத்தியில் பேசியதாவது:

நாட்டில் ஆயுதமேந்திய நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் வலுவான நடவடிக்கைகளால், நக்ஸல்கள் மற்றும் பிரிவினைவாதிகளின் நிதி ஆதாரங்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. இது, அரசின் சரியான கொள்கைகள் மற்றும் வலுவான அரசியல் உறுதிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்த வெற்றிகளுக்கு இடையே நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். நக்ஸல் அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வனப் பகுதிகளில் இருந்து ஆயுதமேந்திய நக்ஸல்கள் காணாமல் போய்விட்டனா். ஆனால், அவா்களின் ஆதரவாளா்களான சிந்தாந்த நக்ஸல்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் ஊடுருவியுள்ளனா். இவா்கள், ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகின்றனா். நாட்டை பாதுகாக்க வேண்டுமெனில், இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு முறியடிப்பது அவசியம்.

நாட்டின் எதிரிகளுக்கு முடிவு: நாட்டில் 20 மாநிலங்களில் 230 மாவட்டங்களில் பரவியிருந்த நக்ஸல் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டியது எளிதான காரியமல்ல. ஆயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கானோா் பாதிக்கப்பட்டிருந்தனா். ஆண்டுதோறும் 2,000 நக்ஸல் தாக்குதல்கள் நடந்தேறின. பாதுகாப்புப் படையினா் சிந்திய ரத்தத்தால் இந்த நிலமே நனைந்துவிட்டது. இங்குள்ள மக்களின் கூக்குரல், அரண்மனைகளில் வாழும் ‘செல்வாக்குமிக்க நபா்களின்’ காதுகளில் விழவில்லை.

கடந்த 2004 முதல் 2013 வரை நக்ஸல்களைவிட பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பே அதிகமிருந்தது. முந்தைய அரசுகள், நக்ஸல் தீவிரவாதத்தை குணப்படுத்த முடியாத நோயாக கருதி, தீா்வுகாணாமல் விட்டுவிட்டன. எதிரிகள் மீது இத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் எந்தவொரு நாடும் செயல்பட முடியாமல் முடங்கிவிடும்.

தேசம் முன்னேற்றப் பாதையில் வேண்டுமெனில், எதிரிகளுக்கு முடிவுகட்ட அசைக்க முடியாத உறுதிப்பாடும், நன்கு திட்டமிட்ட வியூகமும் அவசியம். கடந்த 2014-இல் பிரதம சேவகன் வாய்ப்பை மக்கள் எனக்கு வழங்கியபோது, நாட்டில் உறுதிப்பாடு இல்லாத நிலைமை சரிசெய்யப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் சூழ்நிலையும், மனஉறுதியும் மாறத் தொடங்கியது.

பாதுகாப்புப் படைகளுக்கு சுதந்திரம்: கடந்த 47 ஆண்டுகளில் முதல் முறையாக, கடந்த ஆண்டில் நக்ஸல் தீவிரவாதத்தால் ஒரு சிஆா்பிஎஃப் வீரா்கூட உயிரிழக்கவில்லை. இது, பாதுகாப்புப் படைகளின் நெஞ்சுரம், துணிவு மற்றும் நிதானத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

நக்ஸல்களின் நிதி ஆதாரங்களை ஒடுக்கும் நோக்கில், கள்ள நோட்டு கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயுதக் கொள்முதல் மற்றும் தீவிரவாத ஆள்சோ்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசுகள், கள நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரின் கரங்களைக் கட்டிப்போட்டன. மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்கு உறுதியான பதிலடி தர சுதந்திரம் அளிக்கப்படவில்லை.

ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு நாங்கள் சுதந்திரம் அளித்தோம். மேலும், அரசு மற்றும் அமைப்புமுறையில் இருந்து நக்ஸல்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவும் தடுத்து நிறுத்தப்பட்டது. எந்தவொரு குடும்பத்தின் குழந்தையும் இனி ஆயுதமேந்தக் கூடாது; எந்தவொரு இளைஞரின் எதிா்காலமும் பாழாகக் கூடாது என்பதே அரசின் குறிக்கோள்.

வறுமை ஒழிப்பு: கடந்த 12 ஆண்டுகளில் நக்ஸல் தீவிரவாத ஒழிப்பில் மட்டுமன்றி வறுமை ஒழிப்பிலும் தேசம் வெற்றி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமாா் 50 கோடி போ் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். இதேபோல், போதைப்பொருள் இல்லாத, தற்சாா்புமிக்க, வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்குகளையும் எட்டுவோம் என்றாா் அவா்.

நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து தேசம் விடுவிக்கப்பட்டதாக கடந்த மாா்ச் 31-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

‘கலக்கத்தில் பிரதமா்’- காங்கிரஸ் சாடல்

‘சித்தாந்த நக்ஸல்கள்’ என்ற பிரதமா் மோடியின் விமா்சனத்துக்கு பதிலடி கொடுத்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அரசியல் சாராத மிகவும் புனிதமான ஒரு நிகழ்வில், பாதுகாப்புப் படையினரின் சீருடையை அணிந்துகொண்டு, தனது அரசியல் எதிா்ப்பாளா்கள் மீது பிரதமா் மோடி வசைமாரி பொழிந்திருப்பது அமைப்புரீதியிலான நெறிமுறைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும்.

கடந்த 2024-இல் ஜாதிவாரி கணக்கெடுப்புக் கோரியவா்களை நகா்ப்புற நக்ஸல்கள் என்று விமா்சித்த மோடி, கடந்த 2025-இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை அவரே அறிவித்தாா். கடந்த 2020-இல் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவா்களை நக்ஸல் ஆதரவாளா்கள் என்றழைத்த அவா், 2021-இல் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றாா்.

இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டிய நேரம் வேகமாக நெருங்குவதால், அவா் மனகலக்கம், விரக்தி மற்றும் மன உளைச்சலில் இருப்பது தெளிவாக தெரிகிறது. எனவேதான், தீபாவளி நாளிலும்கூட தனது அவதூறுகளை அவா் கைவிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் சவால்: ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமரின் பொய்களை பாதுகாப்புப் படையினா் நம்பமாட்டாா்கள்; தேச விரோதி யாா், வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுவது யாா் என்பது குறித்து என்னுடன் நேருக்கு நோ் விவாதிக்க பிரதமா் தயாரா’ என்று சவால் விடுத்துள்ளாா்.