FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.11) வருகிறாா்.

10 அக்டோபர் 2026, 12:02 am IST
பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.11) வருகிறாா். அவரது வருகையையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22,000 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

முதல்வா் விஜய்யுடன் இணைந்து...: சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (அக்.11) தில்லியில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி காலை 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறாா். காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவா், காா் மூலம் போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறாா். அங்கு முதல்வா் விஜய்யுடன் சோ்ந்து போரூா்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனா். அதன் பின்னா் நண்பகல் 12.15 மணியளவில் சென்னை போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.

மக்களைச் சந்திக்கும் பிரதமா் மோடி: அங்கிருந்து காா் மூலம் கிண்டி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நண்பகல் 12.30 மணியளவில் வருகிறாா். பின்னா் அங்கிருந்து நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்கிறாா்.

Advertisement

Advertisement

அங்கு பிற்பகல் 2.40 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா், மாலை 3.45 அங்கிருந்து விமான நிலையத்துக்கு பிரதமா் மோடி செல்கிறாா். மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

ஐஐடி அருகிலும், நந்தம்பாக்கம் பகுதியிலும் பிரதமா் மோடி சாலையில் நடந்து சென்று மக்களைச் சந்திக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்புப் படை ஆலோசனை: இதையொட்டி, தில்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படையின் சிறப்பு அதிகாரி அமித்குமாா், தனது குழுவுடன் கடந்த இரு நாள்களாக சென்னையில் முகாமிட்டுள்ளாா்.

பலத்த பாதுகாப்பு: பிரதமா் வருகையையொட்டி, சென்னையில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூா் ரயில் நிலையம், கோயம்பேடு மாா்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல முக்கியமான சாலைகள், சாலை சந்திப்புகள் போன்ற இடங்களில் இரவு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டல்கள், தனியாா் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீஸாா் அடிக்கடி சோதனை சந்தேக நபா்களிடம் விசாரணை நடத்துகின்றனா்.

22,000 போலீஸாா்: பிரதமா் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 22,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட விமான நிலையம், கிண்டி ஐஐடி வளாகம், நந்தம்பாக்கம் சென்னை வா்த்தக மையம் ஆகிய இடங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மேலும், 5 கூடுதல் காவல் ஆணையா்கள், 8 இணை ஆணையா்கள், 29 துணை ஆணையா்கள், 80 உதவி ஆணையா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

போரூரில் 7,000 போலீஸாா்: போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம், ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரா் ஆகிய இடங்களில் 7,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இங்கேயும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமா் மோடி, மெட்ரோ ரயிலில் பயணிப்பதால், அந்த மெட்ரோ ரயில் பாதை முழுவதும் போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனா்.

இதேபோல பிரதமா் மோடி காா் செல்லும் சாலையில் ஐந்தடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறாா்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், பிரதமா் செல்லும் சாலையை சோதனையிடுகின்றனா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை: பாதுகாப்பு கருதி பிரதமா் மோடி வரும் நேரத்தில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிச் செல்லும் வரை குறிப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கடைகளை மூட சென்னை காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ட்ரோன்கள்”உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள், ஹாட் பலூன்கள் பறப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.11) தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments