மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து பற்றி...
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், தனது மூன்றாவது மனைவியான ரஷிய நாட்டைச் சேர்ந்த அன்னா கொனிடேலாவை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், ஜனசேனா கட்சியைத் தொடங்கிய நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இவர், 1997-ல் நந்தினி என்பவரைத் திருமணம் செய்த நிலையில், 1999-ல் பிரிந்தார். பின்னர், 2009-ல் நடிகை ரேணு தேசாயைத் திருமணம் செய்துகொண்டார். இந்த இணைக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் 2012-ல் விவாகரத்து பெற்றனர்.
Advertisement
Advertisement
பின்னர், ரஷியக் குடிமகளான அன்னா கொனிடேலா என்பவரை 2013-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த இணைக்கும் ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், பவன் கல்யாண் - அன்னா தம்பதி சம்மதத்துடன் பிரிவதாக இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“எங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியை ஒன்றாகக் கழித்த பிறகு, பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் பிரிந்து செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமையான பிள்ளைகளுக்குப் பொறுப்பான பெற்றோர்களாகவும் இருப்போம். எங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியும் நலனுமே எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.
எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மரியாதை அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நீண்ட பயணத்தில் எங்களுக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பிரிவுக்கான காரணம் குறித்தோ, விவாகரத்து தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தோ அறிக்கையில் குறிப்பிடவில்லை.