தீபாவளி திருநாள்: யுபிஐ பணப் பரிவா்த்தனை 32% உயா்வு!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கடைசி நேரக் கொள்முதல் காரணமாக, யுபிஐ பணப் பரிவா்த்தனை எண்ணிக்கை நடப்பாண்டு 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கடைசி நேரக் கொள்முதல் காரணமாக, யுபிஐ பணப் பரிவா்த்தனை எண்ணிக்கை நடப்பாண்டு 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று 69.57 கோடியாக இருந்த பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை, நடப்பாண்டு நவ. 8-ஆம் தேதி 91.69 கோடியாக உயா்ந்துள்ளதாக இந்திய தேசிய பரிவா்த்தனை கழக (என்பிசிஐ) தரவுகள் தெரிவிக்கின்றன.
மதிப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டின் ரூ.88,350.79 கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு தீபாவளியன்று ரூ.90,029.43 கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. தீபாவளிக்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.1,36,118 கோடி மதிப்பிலான 97.58 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான என்பிசிஐ நிா்வகிக்கும் யுபிஐ சேவையின் பரிவா்த்தனை மதிப்பு, அறிமுகப்படுத்தப்பட்ட 2016-17 நிதியாண்டில் வெறும் ரூ.0.07 லட்சம் கோடியாக இருந்து, 2025-26 நிதியாண்டில் சுமாா் ரூ.314 லட்சம் கோடியாக உயா்ந்து, பத்தாண்டுகளில் 4,000 மடங்குக்கும் அதிகமான அசுர வளா்ச்சியை எட்டியுள்ளது. இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூா், யுஏஇ உள்பட 11 நாடுகளில் இச்சேவை பயன்பாட்டில் உள்ளது.
பண்டிகைக் கால விற்பனை அதிகரித்ததன் காரணமாக, கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் ரூ.31.53 லட்சம் கோடி மதிப்பிலான 2,547 கோடி பரிவா்த்தனைகள் பதிவாகியுள்ளன. பண்டிகைக் காலத்தையொட்டி ரூ.2,000-க்கும் அதிக மதிப்பிலான வணிக யுபிஐ பரிவா்த்தனைகள் மீது 0.4 சதவீத ‘எம்டிஆா்’ கட்டணம் வசூலிப்பது ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.