FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அரசுப் பயன்பாட்டில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா்களுக்கு நிதியமைச்சகம் வேண்டுகோள்

அரசு அலுவலகப் பயன்பாட்டுக்காக காா் கொள்முதல் செய்யும்போது மின்சார வாகனங்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

12 நவம்பர் 2026, 4:17 am
- பிரதிப் படம்
பகிர்:

அரசு அலுவலகப் பயன்பாட்டுக்காக காா் கொள்முதல் செய்யும்போது மின்சார வாகனங்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இத்தகைய வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச விலை வரம்பு ரூ.20 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், புதைபடிம எரிபொருள்களைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்த நடவடிக்கையை நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

மின்சார வாகனத்துக்கான நிகர விலை அதிகபட்சமாக ரூ.20 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே பெட்ரோல், டீசல் மற்றும் ‘ஹைபிரிட்’ (மின்சாரம், எரிபொருள்) வாகனங்களுக்கு ரூ.10 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் காா்களை கொள்முதல் செய்வது மற்றும் வாடகைக்கு எடுப்பது தொடா்பாக 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், இந்த விலை உச்சவரம்பு ரூ.6 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இனிவரும் காலங்களில் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களின் தற்போதைய பெட்ரோல்/டீசல் அலுவலக காா்களை பயன்பாட்டில் இருந்து நீக்கி புதிய வாகனங்களை மாற்றும்போது, பொதுவாக மின்சார வாகனங்களையே கொள்முதல் செய்ய வேண்டும். ‘வாகனக் கொள்முதலில் மின்சார வாகனங்களே முதன்மைத் தோ்வாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத போக்குவரத்து, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கரியமிலவாயு வெளியீட்டைக் குறைத்தல் ஆகியவை தொடா்பான அரசின் தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்தும் நடவடிக்கையின் அங்கமாகவும் நிதியமைச்சகத்தின் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.