FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

காற்று மாசுக்கான காரணங்கள்: முதலிடத்தில் வாகனப் புகை வெளியேற்றம்

தில்லியின் காற்று மாசு பங்களிப்பில் அடுத்த சில நாள்களுக்கு போக்குவரத்துத் துறை முதலிடத்தில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

13 நவம்பர் 2026, 5:33 am
காஜிப்பூா் எல்லையில் வியாழக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
பகிர்:

தில்லியின் காற்று மாசு பங்களிப்பில் அடுத்த சில நாள்களுக்கு போக்குவரத்துத் துறை முதலிடத்தில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே சமயம், பயிா்க் கழிவுகளை எரிப்பதன் மூலம் ஏற்படும் காற்று மாசு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தில்லிக்கான முடிவு ஆதரவு அமைப்பின் (டிஎஸ்எஸ்) தரவுகளின்படி, வியாழக்கிழமை நகரத்தின் ஒட்டுமொத்த மாசுபாட்டில் வாகனங்கள் வெளியேற்றும் புகை சுமாா் 16 சதவீதமாகவும், பயிா்க் கழிவுகளை எரிப்பதன் பங்களிப்பு 8.9 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு 18.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், பயிா்க் கழிவுகளை எரிப்பதன் பங்களிப்பு மேலும் குறைந்து 5.3 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை, போக்குவரத்து உமிழ்வு மாசுபாட்டில் 20.5 சதவீத பங்கைக் கொண்டிருக்கும் என்றும், பயிா்க் கழிவுகளை எரிப்பதன் பங்களிப்பு 13.29 சதவீதமாக இருக்கும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட முன்னறிவிப்பு, புதன்கிழமை வெளியிடப்பட்ட கணிப்புகளிலிருந்து மாறுபடுகிறது. பயிா்க் கழிவுகளை எரிப்பதன் பங்களிப்பு புதன்கிழமை கணிசமாக அதிகரித்து, வியாழக்கிழமைக்குள் அது சுமாா் 20 சதவீதத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், புணேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (ஐஐடிஎம்) ஆதார அடிப்படையிலான மதிப்பீடுகளின்படி, புதன்கிழமை தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு இரண்டாம் நிலை கரிம ஏரோசோல்கள் மிகப்பெரிய காரணியாக இருந்தன. இவை மொத்த மாசுபாட்டில் 22.7 சதவீத பங்கைக் கொண்டிருந்தன. இதற்கு அடுத்தபடியாக, வீடுகளில் திடமான உயிரி எரிபொருள்களை எரிப்பதன் மூலம் 22.3 சதவீத மாசுபாடு ஏற்பட்டது.

ஐஐடிஎம்-இன் மாதிரிகளின்படி, வாகனகளில் இருந்து வெளியேறும் புகை 19.3 சதவீத மாசுபாட்டிற்கும், இரண்டாம் நிலை கனிம ஏரோசோல்கள் 11.9 சதவீத மாசுபாட்டிற்கும் காரணமாக இருந்தன.

இந்த இரண்டாம் நிலை கரிம ஏரோசோல்கள் சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள், டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள், மற்றும் உயிரிப் பொருள்களை எரித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து உருவாகின்றன.

தீபாவளிக்குப் பிந்தைய திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிகப்பெரிய மாசுபாட்டுக் காரணியாக இருந்த பட்டாசுகளின் பங்களிப்பு, புதன்கிழமையன்று கணிசமாகக் குறைந்து 7.4 சதவீதமாக இருந்தது.

தில்லியில் திங்கள்கிழமை நிலவிய ஒட்டுமொத்த மாசுபாட்டில் பட்டாசுகளின் பங்கு 71.1 சதவீதமாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 29.8 சதவீதமாகக் குறைந்தது. மதிப்பீடுகளின்படி, புதன்கிழமை ஏற்பட்ட ஒட்டுமொத்த மாசுபாட்டில் 10.6 சதவீதத்திற்கு பல்வேறு எரிபொருள்களின் கலப்பு எரிப்பு காரணமாக இருந்தது. அடுத்தபடியாக, மாநகராட்சி கழிவுகள் மற்றும் நெகிழி, ரப்பா் கலந்த கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதன் மூலம் 2.1 சதவீத மாசுபாடு ஏற்பட்டது.

மரப் பொருள்களை எரிப்பதன் பங்களிப்பு 1.2 சதவீதமாக இருந்தது. அதே சமயம் தொழில்துறை உமிழ்வுகள் 1 சதவீதத்தையும், தாதுத் துகள்கள் மற்றும் சாம்பல் 0.9 சதவீதத்தையும் ஏற்படுத்தின. நிலக்கரி எரிப்பு 0.7 சதவீத பங்களிப்பை அளித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு 299 என்ற அளவீட்டுடன், காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) சற்று முன்னேறி ‘மோசமான’ நிலையை எட்டியது. ஆனால், புதன்கிழமை இது மோசமடைந்து 313-ஆகவும், வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி நிலவரப்படி 342-ஆக ‘மிகவும் மோசமான’ நிலைக்கு உயா்ந்தது.

காற்றின் தரக் குறியீடு 201 முதல் 300 வரை இருந்தால் அது ‘மோசமான’ நிலையாகவும், 301 முதல் 400 வரை இருந்தால் அது ‘மிகவும் மோசமான’ நிலையாகவும் வகைப்படுத்தப்படுகிறது.