மோடியிடம் கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளரின் இந்திய பயண விசா ரத்து!
மோடியிடம் கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளரின் இந்திய பயண விசா ரத்து செய்யப்பட்டது பற்றி...
நார்வேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது, அவரிடம் கேள்வி எழுப்பிய அந்நாட்டு பத்திரிகையாளர் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சனின் இந்திய பயண விசா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் தெலங்கானா அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரத் உச்சிமாநாடு கடந்த நவ. 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில் ஊடகங்களின் எதிர்காலம் என்ற தலைப்பில், நார்வே பத்திரிகையாளர் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் கலந்துரையாடவிருந்தார்.
இதற்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் விசாவை இந்திய தூதரகம் வழங்கியிருந்த நிலையில், ஹைதராபாத் பயணத்துக்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக அவரது விசாவை இந்திய அதிகாரிகள் ரத்து செய்தனர்.
ஓஸ்லோவிலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்படவிருந்த நிலையில், அவரைத் தொடர்புகொண்ட ஓஸ்லோவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகையால், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் ஹெல்லேவிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹெல்லே,
“இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள எனக்கு விசா கொடுக்கப்பட்டிருந்தது. ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள பாரத் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள புறப்படவிருந்தேன். ஊடகங்களின் எதிர்காலம் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்த விவாதத்தில், பேச்சாளராகவும் பங்கேற்பாளராகவும் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த "மேலிட உத்தரவு" காரணமாக எனது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்து விடியோ வெளியிட்டுள்ளார்.
ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சனின் விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மோடியிடம் கேள்வி எழுப்பியவர்
கடந்த மே மாதம், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு, கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, நார்வேயின் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் என்ற பெண் செய்தியாளர், பிரதமர் மோடியை நோக்கி ‘மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தியாவை ஏன் நம்ப வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பில் எந்தக் கேள்விக்கும் தலைவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேள்வியை எதிர்கொள்ளாமல் இருநாட்டு தலைவர்களும் வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா பின்தங்கியுள்ளதாக ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதப்பொருளானது.