பாதி படுக்கைக்கு முழுக் கட்டணமா? ஆர்.ஏ.சி. டிக்கெட் முறையில் வரும் மாற்றம்!
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஆர்.ஏ.சி. டிக்கெட் முறையில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதைப் பற்றி...
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஆர்.ஏ.சி. டிக்கெட் முறையில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்களில் செல்லும் பயணம் என்றாலே பலருக்கும் விருப்பம்தான். நீண்டதூரப் பயணங்களுக்கு பேருந்துகள், கார்களில் செவதைவிட அதிகளவில் சொகுசானப் பயணத்துக்கும், விமானம், பேருந்து கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், உயர்தர வசதி மற்றும் குறைவான கட்டணம் என்பதாலும், கழிப்பறை வசதி, ரயில் உள்ளேயே உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை கிடைப்பதால் பலரும் ரயில் பயணத்தைப் பலரும் விரும்பி பயணிக்கின்றனர்.
Advertisement
Advertisement
அதேநேரத்தில், திடீரென டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் போவது, 120 நாள்களாக இருந்த முன்பதிவு தற்போது 60 நாள்களாகக் குறைக்கப்பட்டது போன்றவை பலரையும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளன. அதுமட்டுமன்றி, தத்கல் பதிவிலும் சில நேரங்களில் ரெக்ரெட் - வருந்தச் செய்வது, பயணத்துக்கு எட்டு மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திருப்பி செலுத்தப்படாது என்ற பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல, ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் கிடைப்பதும் அவ்வளவு எளிதானதல்ல. இவ்வாறான சூழலில் டிக்கெட் கிடைத்தாலும் பல நேரங்களில் ஆர்.ஏ.சி. (RAC -Reservation Against Cancellation) கிடைத்துவிட்டால் அந்த ரயில் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் வராதபட்சத்தில் ஆர்.ஏ.சி.-யிலிருந்து ஸ்லீப்பர் கிடைக்கும்.
இந்திய ரயில்வேயில் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு, ஆர்.ஏ.சி. முறையில் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு ஏற்க வழங்கப்படுகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்பட்சத்தில், காலியாகும் படுக்கையை மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முறையாக ஆர்.ஏ.சி. செயல்படுகிறது.
ஆர்.ஏ.சி. முறையில், ஒரே படுக்கை இரண்டு பயணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு பயணிக்கும் பாதி படுக்கை இடம் மட்டுமே கிடைக்கிறது. அது இரவுப் பயணத்தில் என்றால், பகல் நேரத்தில் ஒரு இருக்கையில் ஒருவருக்கும் மற்றொரு இருக்கையில் இருவரும் உட்கார வேண்டும்.
ஸ்லீப்பர் கிடைத்தாலும், சைட் லோயரில் ஆர்.ஏ.சி. பயணத்தில் உட்கார்ந்து கொண்டே சென்றாலும் இருவரிடமும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வசதி பயணிகளுக்குத் தொடர்ந்து கவலைகளை அளித்து வரும் நிலையில், ரயில் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் ஆர்.ஏ.சி. முறையை நீக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பயணிக்கு படுக்கை இடம் கிடைக்காத நிலையில், அவரிடம் முழுக் கட்டணம் வசூலிப்பது சரியானதாக இருக்குமா?, பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கிறதே? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஒரே இருக்கை ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு ஒதுக்கப்படும்போதும் ஆர்.ஏ.சி. முறை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழல்களில் வேறு இருக்கைகளை ஏற்பாடு செய்வதில் ரயில் டிக்கெட் பரிசோதகர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
முன்னதாக, ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆர்ஏசி அடிப்படையில் பகுதியளவு படுக்கை மட்டுமே ஒதுக்கப்படும் பட்சத்தில், பாதி தொகையைத் திருப்பி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்தது.
அதன்படியே, ரயில் டிக்கெட் பதிவுகளில் ஆர்.ஏ.சி. நடைமுறைக்குத் தீர்வு காணும் வகையில் விரைவிலேயே அறிவிப்புகள் வெளியாகும் என்று பயணிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.