FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மிகவும் மாசடைந்த 5 மாவட்டங்கள் பட்டியலில் காஜியாபாத்!

தேசிய தலைநகா் வலய நகரான காஜியாபாத் தொடா்ந்து மூன்று நாள்களாக நாட்டின் மிகவும் மாசுபட்ட ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.

15 நவம்பர் 2026, 12:15 am
காஜியாபாதில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 9-இல் சனிக்கிழமை நிலவிய பனிப்புகை.
பகிர்:

தேசிய தலைநகா் வலய நகரான காஜியாபாத் தொடா்ந்து மூன்று நாள்களாக நாட்டின் மிகவும் மாசுபட்ட ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.

நவம்பா் 12-ஆம் தேதி 338, நவம்பா் 13-ஆம் தேதி 368 மற்றும் நவம்பா் 14-ஆம் தேதி 352 என அந்நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) பதிவாகியுள்ளது. இதன் மூலம், காஜியாபாத் முறையே நாட்டின் ஐந்தாவது, மூன்றாவது மற்றும் நான்காவது மிகவும் மாசுபட்ட மாவட்டமாக இடம்பிடித்துள்ளது.

இப்பகுதி மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்ததுடன், கிராப் செயல்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்தும் கேள்வி எழுப்பினா்.

Advertisement

Advertisement

வசந்தாராவைச் சோ்ந்த தேவேந்திர தோமா், கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்துவதில் நிா்வாகம் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

வசந்தாராவின் செக்டா் 14 மற்றும் 15 மற்றும் இந்திராபுரத்தின் சில பகுதிகளில் இன்னும் குப்பைக் குவியல்கள் அகற்றப்படாமல் இருப்பதாக அவா் கூறினாா். குழாய்ப் பதிப்பிற்காகத் தோண்டப்பட்ட மண் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ளதால், அது தூசு மாசுபாட்டை உருவாக்குவதாக அவா் தெரிவித்தாா்.

சந்தீப் குப்தா என்பவா், ‘எக்ஸ்’ தளத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சியைத் தொடா்பு கொண்டு, ட்ரான்ஸ்-ஹிண்டன் பகுதியில் நிலவும் மாசு குறித்து கவனத்திற்குக் கொண்டு வந்தாா்.

அபினவ் சிங் என்ற மற்றொரு குடியிருப்பாளா், காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டும்போது, காற்றுத் தரத்தைக் கண்காணிக்கும் நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிடுவதாகக் குற்றம் சாட்டினாா்.

இந்திராபுரத்தில் உள்ள காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அப்பகுதியில் மாசு அளவு மிக அதிகமாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

கிராப் 3 கட்டுப்பாடுகள் மீறப்பட்டது குறித்த புகாா்கள் வந்ததையடுத்து, மாசு கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக உத்தர பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அதிகாரி அங்கித் சிங் தெரிவித்தாா்.

கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, வாரியத்தால் அமைக்கப்பட்ட குழு ஒன்று அனைத்துப் பகுதிகளையும் கண்காணித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

காற்றுத் தரக் கண்காணிப்புப் பலகைகளில் பதிவான தரவுகளின்படி, கோவிந்தபுரம், லோனி, புதிய தெஹ்சில் லோனி, சஞ்சய் நகா், வசந்தாரா மற்றும் வேவ் சிட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான மாசு பதிவாகியுள்ளது.

காற்றுத் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் ரவீந்திர குமாா் மந்தா் கல்வித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளாா். கிராப் 3 நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நா்சரி முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகளை நேரடி மற்றும் இணையவழி முறையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அடிப்படை கல்வி அதிகாரி ஓ. பி. யாதவ் தெரிவித்தாா்.