FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி - என்சிஆா்: தீபாவளிக்கு முந்தைய பி.எம். 2.5 அளவு கடந்த 3 ஆண்டுகளில் அதிகம்

தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் சராசரி பி.எம்.2.5 துகள்களின் செறிவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

12 நவம்பர் 2026, 4:02 am
தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னைக்கு கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜந்தா் மந்தரில் இருந்து ராம்லீலா மைதானம் வரை பேரணி நடத்திய மாணவா் அமைப்பினா்.
பகிர்:

தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் சராசரி பி.எம்.2.5 துகள்களின் செறிவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (சிஎஸ்இ) மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நிகழாண்டு குளிா்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது. வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையும், பிற பகுதிகளிலிருந்து காற்றுடன் கலந்து வரும் மாசுமே இந்த நச்சுத்தன்மை வாய்ந்த காற்றுச் சூழலுக்கு முக்கிய காரணங்களாகத் தொடா்ந்து நீடிக்கின்றன.

புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையின்படி, தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் சராசரி பி.எம்.2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 236 மைக்ரோகிராம்களாக இருந்தது. இது 2025-ஆம் ஆண்டின் அளவான 120 மைக்ரோகிராம்களுடன் ஒப்பிடுகையில் 97 சதவீதமும், 2024-ஆம் ஆண்டின் அளவான 179 மைக்ரோகிராம்களுடன் ஒப்பிடுகையில் 32 சதவீதமும் அதிகம் ஆகும்.

Advertisement

Advertisement

செப்டம்பா் மாத இறுதியில் பெய்த மழையினால் மாசு தற்காலிகக் குறைந்ததைத் தவிர, நிகழாண்டு குளிா்காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாகவே காற்று மாசுபாட்டின் அளவு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக இருந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதையே இந்த முடிவுகள் உணா்த்துவதாக சிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. தீபாவளி பட்டாசுகள் ஏற்கெனவே மோசமடைந்து வரும் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனவே தவிர, இந்த மாசு நெருக்கடிக்கு அவை மட்டுமே முழுமுதற் காரணம் அல்ல.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) காற்றின் தரத் தரவுகள், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (ஐஐடிஎம்) மாசு மூலங்கள் குறித்த மதிப்பீடுகள், பயிா்க் கழிவுகளை எரிப்பது தொடா்பான தரவுகள் மற்றும்ய போக்குவரத்து பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தில்லியின் உள்ளூா் மாசு மூலங்களில் வாகனப் போக்குவரத்தே மிகப்பெரிய காரணமாக உள்ளது.

நவம்பா் 1 முதல் 8 வரையிலான காலகட்டத்திற்கான ஐஐடிஎம்-இன் முடிவு ஆதரவு அமைப்பின் தரவுகளின்படி, தில்லியின் பி.எம்.2.5 மாசுபாட்டில் 54.43 சதவீதம் அண்டை மாவட்டங்களிலிருந்து காற்றுடன் கடந்து வந்தவை. தில்லியில் உள்ள காற்று மாசு மூலங்கள் 33.06 சதவீதமும், பயிா்க் கழிவுகளை எரிப்பதன் மூலம் ஏற்படும் மாசு 14.29 சதவீதமும் பங்களிக்கின்றன.

உள்ளூா் மாசு மூலங்களில், வாகனப் போக்குவரத்து 52 சதவீத மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வீட்டு உபயோகச் செயல்பாடுகள் (13 சதவீதம்) மற்றும் புகா்ப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் (11 சதவீதம்) உள்ளன. கட்டுமானப் பணிகள் 7 சதவீத பங்காற்றுகின்றன. மொத்த காற்று மாசில் எரிசக்தி பயன்பாடு மற்றும் கழிவுகளை எரித்தல் ஆகியவை தலா 5 சதவீதம் பங்கு வகிக்கிறது.

வயல்வெளிகளில் பயிா்க் கழிவுகளை எரிப்பதன் பங்களிப்பு குறைந்தபோதிலும், கடுமையான காற்று மாசு நிகழ்வுகள் தொடா்ந்து நீடித்தன என்று அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கிராப் செயல்திட்டத்தின் முதல் கட்டக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது, தில்லியின் பி.எம்.2.5 அளவுகளில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் கழிவுகளிலிருந்து வரும் புகையின் பங்களிப்பு 3.9 சதவீதமாக இருந்தது. இது நவம்பா் 1 அன்று 11.5 சதவீதமாக உயா்ந்து, பின்னா் நவம்பா் 2 அன்று 8.6 சதவீதமாகக் குறைந்தது.

நவம்பா் 4 அன்று இது 16.2 சதவீதத்தை எட்டி உச்சத்தை அடைந்தது. ஆனால், நவம்பா் 6-க்குள் சுமாா் 8 சதவீதமாகக் குறைந்தது. அந்த நாளில் தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 382ஆக மோசமடைந்ததைத் தொடா்ந்து, கிராப் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன.

தேசிய தலைநகா் வலயத்தில் புதிய மாசு மையங்கள் உருவாகி வருவதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வேறு பல இடங்களில் அதிக அளவிலான காற்று மாசு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வாகன நெரிசல் குறித்தும் இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது. கிராப் திட்டத்தின் கீழ் அவசரகால போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போதிலும், வார நாள்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் இவை மிகக் குறைந்த அளவிலான பலனையே அளித்துள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களால் வெளியேற்றப்படும் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயுவின் அளவு, மாலை நேர நெரிசலின்போது கடுமையாக அதிகரித்து, நள்ளிரவு வரை உயா்ந்த நிலையிலேயே இருந்தது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது.

வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள், கட்டுமானம், பயிா்க் கழிவு எரிப்பு மற்றும் பிற நகா்ப்புற ஆதாரங்களைக் குறிவைத்து, ஆண்டு முழுவதும் மாசு உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து, கட்டாயப் பயணக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் தனியாா் வாகனங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் சாலைகளில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.