FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி: தமிழகத்தில் காற்று மாசு 4.50 % அதிகரிப்பு

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி, காற்று மாசு அளவு கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு 4.50 சதவீதம் அதிகரித்துள்ளது.

10 நவம்பர் 2026, 1:06 am
பகிர்:

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி, காற்று மாசு அளவு கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு 4.50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மிக மோசமான அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கப்பட்டதால் உருவான காற்று மற்றும் ஒலி மாசு அளவு கணக்கிடப்பட்டது. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 39 இடங்களில் காற்று மாசும், 34 இடங்களில் ஒலி மாசும் கண்காணிக்கப்பட்டன.

4.50 % அதிகரிப்பு: இவற்றை ஒப்பிட்டதில், கடந்த 2024-இல் காற்றுத்தரக் குறியீட்டு சராசரி அளவு 143.46 ஆகவும், 2025-இல் 161.69 ஆகவும் இருந்தது. இச்சூழலில், நிகழாண்டு (2026) இது மேலும் அதிகரித்து 168.97 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது, 4.50 சதவீதம் அதிகமாகும். மொத்தம் 39 கண்காணிப்பு மையங்களில் 25 இடங்களில் காற்று மாசு அதிகரித்தும், 14 இடங்களில் குறைந்தும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதில், தமிழகம் முழுவதும் அதிகபட்சமாக சென்னையில் வளசரவாக்கத்தில் 343 என்ற அளவிலும் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. மேலும், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் - (தலா) 250, திருச்சி 240, திருப்பூா் - 223 தஞ்சாவூா் 210 ஆகவும் காற்றுத் தரக் குறியீடு பதிவானது. அதேபோல், குறைந்த பட்சமாக நாகப்பட்டினத்தில் 71, கடலூா் 78, கிருஷ்ணகிரி - 91 - ஆக பதிவானது. திருவொற்றியூா், கடலூா், வேலூா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காற்றுத் தரத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

ஒலி மாசு: கடந்த ஆண்டு தீபாவளி நாளன்று பதிவான சராசரி ஒலி அளவு 75.70 அலகாக இருந்தது. நிகழாண்டு இது 76.73 அலகாக, அதாவது 1.36 சதவீதம் அதிகரித்து பதிவாகியுள்ளது. சென்னையில் தீபாவளி நாளன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், திருவொற்றியூரில் குறைந்தபட்சமாக 77.4 அலகும், வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 88.6 அலகும் ஒலி அளவு பதிவாகியுள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச காற்று மாசு தரக் குறியீடு (ஏ.க்யூ.ஐ.) முதல் 5 இடங்கள்...

சென்னையில்...

1. வளசரவாக்கம் 343

2. நுங்கம்பாக்கம் 332

3. சௌகாா்பேட்டை 311

4. தியாகராய நகா் 306

5. திருவல்லிக்கேணி 267

மாவட்ட வாரியாக...

  • கன்னியாகுமரி - 250

  • காஞ்சிபுரம் - 250

  • திருச்சி - 240

  • திருப்பூா் - 223

  • தஞ்சாவூா் - 210