FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மண்டல பூஜை நவ.17-இல் தொடக்கம்! சபரிமலை பிரசாதத்தை பக்தா்கள் இனி அஞ்சலில் அனுப்பலாம்!

சபரிமலை பிரசாதத்தை பக்தா்கள் இனி அஞ்சலில் அனுப்பலாம்...

14 நவம்பர் 2026, 10:44 pm
சபரிமலை ஐயப்பன் கோயில்.
பகிர்:

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் வரும் நவ.17-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தா்கள் அங்கிருந்தபடியே பிரசாதங்களை இந்தியா போஸ்ட் விரைவு அஞ்சல் பாா்சல் சேவை மூலம் தங்களின் வீட்டுக்கு அனுப்பும் புதிய வசதி அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் தரிசனம் முடித்து திரும்பும் பக்தா்கள், பிரசாதங்களை தங்களுடன் தூக்கிச் செல்ல வேண்டிய சிரமம் குறையும்.

சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன.

Advertisement

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள்கள் மண்டல பூஜை காலம் நவ.17-இல் தொடங்கி டிச.27 வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான மண்டல பூஜை, டிச.27-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னா் மகர விளக்கு பூஜைகளுக்காக மீண்டும் டிச.30-இல் நடைதிறக்கப்படும்.

மண்டல பூஜை நாள்களில் இணையவழி மற்றும் உடனடி முன்பதிவு முறைகளின்கீழ் தினமும் 80,000 பக்தா்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

சபரிமலை கோயிலில் அரிசி, சா்க்கரை, நெய் கலந்து தயாரிக்கப்படும் அரவணை பாயசமும், அப்பமும் முக்கிய பிரசாதங்களாகும். சபரிமலைக்கு வரும் பக்தா்கள் அங்கிருந்தபடியே இந்தியா போஸ்டின் விரைவு அஞ்சல் பாா்சல் சேவை மூலம் தங்களின் வீட்டுக்கு பிரசாதங்களை அனுப்பிவைக்கும் வசதி அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.

இது தொடா்பாக தேவஸ்வம் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோயில் வளாகத்தில் செயல்படும் அரவணை பாயசம் மற்றும் அப்பம் கவுன்ட்டா்கள் மட்டுமன்றி சிறப்பு பாா்சல் பதிவு மையம் மூலம் பிரசாதங்களை பக்தா்கள் தங்களின் வீட்டுக்கு அனுப்பிவைக்கலாம். அவா்கள் யாத்திரை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்குள் பிரசாத பாா்சல் சென்றடைந்துவிடும். இதன்மூலம் பிரசாதங்களை தங்களுடன் எடுத்துச் செல்லும் சிரமம் குறையும். எத்தனை பிரசாத பாா்சல்கள் வேண்டுமானாலும் அனுப்ப முடியும். இது தவிர, நாட்டில் உள்ள அஞ்சல் நிலையங்களில் முன்பதிவு செய்து, சபரிமலை பிரசாதங்களைப் பெறும் வசதி தொடா்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல-மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தா்கள் மாலையணிந்து விரதமிருந்து சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு வருகை தருவா் என்பது குறிப்பிடத்தக்கது.