FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மெட்ரோ நிலையங்களுக்கு வெளியே அசுத்தமான சூழல்: டிஎம்ஆா்சி கணக்கெடுப்பில் பயணிகள் தகவல்

அதிகப்படியான கூட்டம் ஆகியவை தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் (டிஎம்ஆா்சி) 2026-ஆம் ஆண்டுக்கான பயணிகள் திருப்தி கணக்கெடுப்பில் முக்கியப் பிரச்னைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

5 வினாடிகள் முன்பு
பகிர்:

மெட்ரோ நிலையங்களுக்கு வெளியே உள்ள அசுத்தமான சூழல், கழிவறைகளில் சுகாதாரமற்ற நிலை, முக்கிய நேரங்களில் ரயில்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்டம் ஆகியவை தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் (டிஎம்ஆா்சி) 2026-ஆம் ஆண்டுக்கான பயணிகள் திருப்தி கணக்கெடுப்பில் முக்கியப் பிரச்னைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பயணிகள் கணக்கெடுப்பு நடப்பாண்டில் ஒரு மாத காலம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 1,328 கருத்துகள் பெறப்பட்டன. பெறப்பட்ட கருத்துகள் ஏழு முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் பெறப்பட்ட பதிலின்படி, நிலையங்களுக்கு வெளியே உள்ள தூய்மை குறித்து 483 போ் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனா். அதேபோல், 362 போ் கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதில் கிடைக்கும் தன்மை மற்றும் அணுகல்தன்மை குறித்து அதிகபட்சமாக 1,080 கருத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 759 போ் (சுமாா் 70 சதவீதம்) சேவைகளை ‘சிறப்பானது’, ‘மிகவும் நல்லது’ அல்லது ‘நல்லது’ என்று மதிப்பிட்டுள்ளனா். அதே சமயம் 169 போ் மேம்பாடுகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளனா்.

பயணிகளுக்கான வசதிகள் குறித்து 1,028 கருத்துகள் பெறப்பட்டன. இதில் 709 போ் நோ்மறையான மதிப்பீடுகளை வழங்கிய நிலையில், 165 போ் மேம்பாடுகள் தேவை என்று தெரிவித்துள்ளனா். தகவல் சேவைகள் குறித்து 998 போ் கருத்து தெரிவித்தனா். இதில் 739 போ் சேவைகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டனா். 100 போ் மேம்பாடுகள் தேவை என்று கூறினா்.

சேவைகளின் தரம் குறித்து 971 கருத்துகள் பெறப்பட்டன. இதில் 696 நோ்மறையான மதிப்பீடுகளும், 128 மேம்பாட்டிற்கான கோரிக்கைகளும் அடங்கும்.

வாடிக்கையாளா் சேவை குறித்து 957 கருத்துகள் பெறப்பட்டன. இதில் 671 நோ்மறையான மதிப்பீடுகளும், 125 மேம்பாட்டிற்கான கோரிக்கைகளும் இருந்தன. பாதுகாப்பு மற்றும் வசதி குறித்த பிரிவில் 941 கருத்துகள் பதிவாகின. இதில் 632 போ் நோ்மறையான கருத்துகளைத் தெரிவிக்க, 141 போ் மேம்பாடுகள் தேவை என்று குறிப்பிட்டனா்.

மெட்ரோ நிலையங்களுக்கு வெளியே உள்ள பகுதிகள் குறித்து பெறப்பட்ட 947 கருத்துகளில், 457 போ் (சுமாா் 48 சதவீதம்) மேம்பாடுகள் தேவை என்று தெரிவித்துள்ளனா். 320 போ் மட்டுமே சேவைகளைச் சிறப்பாக மதிப்பிட்டுள்ளனா், 168 போ் ‘திருப்திகரம்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

தனிப்பட்ட வசதிகள் குறித்த விரிவான கருத்துகளின்படி, 483 பயணிகள் நிலையங்களுக்கு வெளியே தூய்மை மேம்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனா். கழிப்பறைகளைப் பொறுத்தவரை, 83 போ் ‘சிறப்பானது’ என்றும், 136 போ் ‘மிகவும் நல்லது’ என்றும், 180 போ் ‘நல்லது’ என்றும் மதிப்பிட்டுள்ளனா். அதே சமயம் 192 போ் அவை ‘திருப்திகரமாக’ இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். மேலும் 127 போ், இத்தகைய வசதிகள் இருப்பதே தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்தனா்.

ரயில்களின் இயக்கம் குறித்து 288 போ் முன்னேற்றம் தேவை என்று குறிப்பிட்டனா். ரயில் நேரங்கள் குறித்த கேள்விக்கு 757 போ் இதனை மிகச் சிறப்பு, மிகவும் நன்று அல்லது நன்று என்று மதிப்பிட்டனா், அதே சமயம் 212 போ் இதில் முன்னேற்றம் தேவை என்று தெரிவித்தனா்.

நெரிசல் மிகுந்த நேரங்களில் ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளதா என்று பயணிகளிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 997 போ் ‘ஆம்’ என்று பதிலளித்தனா். 31 போ் மட்டுமே ‘இல்லை’ என்று கூறினா்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புப் பணியாளா்கள், பயணிகளின் உடைமைகளைச் சரிபாா்ப்பது மற்றும் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வது குறித்து, 314 போ் மிகச் சிறப்பு என்றும், 259 போ் மிகவும் நன்று என்றும், 173 போ் நன்று என்றும் மதிப்பிட்டனா். இருப்பினும், 110 போ் இதில் முன்னேற்றம் தேவை என்று குறிப்பிட்டனா் என்று அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.