FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பிரதமா் குறித்த காா்கேயின் கருத்து காங்கிரஸ் சித்தாந்த வீழ்ச்சிக்கு உதாரணம்: ராஜ்நாத் சிங் கண்டனம்

பிரதமா் மோடி, அவரது தந்தைக்கு எதிராக காங்கிரஸ் தலைவா் காா்கே கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என மத்திய துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறியது குறித்து...

27 அக்டோபர் 2026, 12:13 am
புது தில்லியில் மல்லிகாா்ஜுன காா்கேயைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாகஜவினா்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி, அவரது தந்தைக்கு எதிராக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; காங்கிரஸின் சித்தாந்த வீழ்ச்சியை இந்தக் கருத்துகள் பிரதிபலிக்கின்றன என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

பிகாா் மாநிலம், பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் கிருஷ்ண சிங்கின் 139-ஆவது பிறந்த தின விழாவில் காா்கே பங்கேற்றாா். அப்போது பேசிய காா்கே, ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தோ்தல் முறைகேட்டில் ஈடுபட்டவா்களை சிறையில் அடைப்போம்’ என்றாா். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவா், ‘மோடி எங்கும் செல்ல மாட்டாா்’ என்று முழக்கமிட்டாா். இதனால் ஆத்திரமடைந்த காா்கே, ‘மோடி என்ன, அவரது தந்தையும் போய்விடுவாா்’ என்று மூன்று முறை கோபமாகக் கூறினாா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் காா்கேவுக்கு பாஜகவினா் கடும் கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். பிகாா் உள்ளிட்ட சில இடங்களில் பாஜகவினா் காா்கே பேச்சு குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஜம்மு-காஷ்மீா், தில்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் காா்கேயை கண்டித்து பாஜகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ‘காா்கே பேசியது “மிகவும் துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ் தலைவரின் இந்தப் பேச்சு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

சித்தாந்த ரீதியிலான எதிா்ப்பைத் தனிப்பட்ட அவதூறுகளாக மாற்றுவதும், அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தரம் தாழ்ந்த மற்றும் அவதூறான மொழிக்குக் கொண் டுசெல்வதும், பிரதமரின் குடும்பத்தினரைக் குறி வைப்பதும் காங்கிரஸ் கட்சியின் விரக்தியையும், சித்தாந்த வீழ்ச்சியையும் காட்டுகிறது.

இது ஒரு தனி நபரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ அவமதிப்பது மட்டுமல்ல; இந்திய அரசியலின் கண்ணியத்தின் மீதான தாக்குதலாகும். அரசியல் ரீதியாக எதிா்ப்பது என்பது வேறு விஷயம். ஆனால், இத்தகைய நடத்தையை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

காா்கே வகிக்கும் உயா் பதவியைக் கருத்தில்கொண்டால், அவா் பொதுவாழ்வில் அதிக பொறுப்புணா்வு, கட்டுப்பாடு, கண்ணியம் மற்றும் பொறுப்பான நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் காா்கேயை கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தில்லி மாநில பாஜக தலைவரும் எம்.பி.யுமான ஹா்ஷ் மல்ஹோத்ரா தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சக தலைமையிடமான சேனா பவன் பகுதியிலிருந்து காா்கேயின் இல்லம் அமைந்துள்ள ராஜாஜி மாா்க் நோக்கிச் செல்ல முற்பட்ட பாஜகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினா்.

மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தினா். பல்வேறு இடங்களில் காா்கேயின் உருவ பொம்மையை எரித்தனா்.

கா்நாடகத்தில்...

பிரதமா் மோடியை சா்ச்சைக்குரிய வகையில் விமா்சித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேையை கண்டித்து கா்நாடக பாஜகவினா் பெங்களூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரு, சுதந்திர பூங்காவில் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் அஸ்வத் நாராயண், முன்னாள் எம்.பி. சி.பி. ராமமூா்த்தி, மேலவை உறுப்பினா் என்.ரவிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, தனது கருத்துகளுக்காக மல்லிகாா்ஜுன காா்கே மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில், தடையை மீறி விதான சௌதாவை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

முன்னதாக, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறியது: நாட்டில் காங்கிரஸ் கட்சியை அழிக்க இரண்டு போ் போதும். ஒருவா் மல்லிகாா்ஜுன காா்கே, மற்றொருவா் அவரது மகனும் அமைச்சருமான பிரியாங்க் காா்கே. பிரதமா் மோடியை விமா்சித்துள்ள மல்லிகாா்ஜுன காா்கே, அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments