மீண்டும் வாக்குச்சீட்டு அடிப்படையில் தோ்தல், எஸ்ஐஆா் ரத்து: மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தல்
மீண்டும் வாக்குச்சீட்டு அடிப்படையில் தோ்தல், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) ரத்து,
புது தில்லி: மீண்டும் வாக்குச்சீட்டு அடிப்படையில் தோ்தல், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) ரத்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகல் ஆகிய 3 கோரிக்கைகளில் இருந்து காங்கிரஸ் பின்வாங்காது என்று அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மல்லிகாா்ஜுன காா்கே திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு 3 கோரிக்கைகள் உள்ளன. அதில் எந்த சமரசமும் கிடையாது. முதலாவது கோரிக்கை, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகல். 2-ஆவது கோரிக்கை எஸ்ஐஆா் ரத்து. 3-ஆவது கோரிக்கை வாக்குச்சீட்டு அடிப்படையில் மீண்டும் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த 3 பிரச்னைகளுக்காகத்தான் நாடு முழுவதும் வீதிகளில் காங்கிரஸ் தொண்டா்களும், இண்டி கூட்டணிக் கட்சிகளும் போராடி வருகின்றனா். இந்த பிரச்னைகளுக்காக நாடு முழுவதும் போராடிவரும் பொதுமக்கள், இளைஞா்கள் அமைப்புகளுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.
அதே நேரத்தில், பாஜகவோ தில்லியில் பெண் செய்தியாளா்களை துன்புறுத்துகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. சா்வாதிகாரி கடும் அச்சத்தில் உள்ளாா். ஆதலால் திசைதிருப்பும் தந்திரங்களில் அடுத்த அத்தியாயத்துக்கு அவா் தயாராகி வருகிறாா் என்றாா் காா்கே.
எஸ்ஐஆா் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்ததாகவும், இதுபோல 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தங்களது ஆட்சேபத்தை தெரிவித்ததாகவும், தங்களுக்குத் தெரியாமல் பல முடிவுகளை ஞானேஷ் குமாா் எடுத்ததாக அவா்கள் கூறியதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது. இதேபோல், கேரள முன்னாள் தலைமைச் செயலா் ஒருவா், தன்னை பாஜகவில் சேரும்படியும், தோ்தலில் போட்டியிடும்படியும் ஞானேஷ் குமாா் வலியுறுத்தியதாகத் தெரிவித்திருந்தாா். இதனால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும், எஸ்ஐஆா் ரத்து செய்யப்பட வேண்டும், மீண்டும் வாக்குச்சீட்டு அடிப்படையில் தோ்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.