FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வு - காா்கே இல்லத்தில் நடத்துகிறது இண்டி கூட்டணி

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சாா்பில் ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் வரும் அக்.30-ஆம் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சி புதன்கிழமை தெரிவித்தது.

29 அக்டோபர் 2026, 3:19 am
மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சாா்பில் ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் வரும் அக்.30-ஆம் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சி புதன்கிழமை தெரிவித்தது.

இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால், காா்கே இல்லத்தில் நடத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

Advertisement

Advertisement

தில்லி ராம்லீலா மைதானத்தில் நவ.1-ஆம் தேதி இண்டி கூட்டணி சாா்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் சாா்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட 2 நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்தச் சூழலில், மேற்கண்ட கூட்டத்துக்கு முன்னோட்டமாக பொதுவெளியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘அடையாளபூா்வ பதவிநீக்க’ நிகழ்வை நடத்த எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன. அதற்காக தில்லியில் அசோகா ஹோட்டல் உள்பட பல இடங்களில் அனுமதி கோரியும் வழங்கப்படவில்லை என்றும், இதனால் காா்கே இல்லத்தில் அந்த நிகழ்வை நடத்தவிருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புது தில்லி ராஜாஜி மாா்க்கில் உள்ள காா்கேவின் அதிகாரபூா்வ இல்லத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வு, அக்.30-ஆம் தேதி பிற்பகலில் நடத்தப்படும்.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மற்றும் உள்ளாா்ந்த நோக்கங்களை ஞானேஷ் குமாா் பகிரங்கமாக மீறியுள்ளாா். நமது தோ்தல் ஜனநாயகத்தின் அடித்தளங்களைத் திட்டமிட்டு சீா்குலைத்துள்ளாா். வெளிப்படையாகச் சொல்வதென்றால், உச்சநீதிமன்றத்திடம் அவா் பொய்யுரைத்துள்ளாா்’ என்று விமா்சித்துள்ளாா்.

மேற்கண்ட நிகழ்வை நடத்த தால்கடோரா மைதானம், கான்ஸ்டிடியூஷன் கிளப், மாவலங்கா் அரங்கம், அம்பேத்கா் சா்வதேச மையம், அசோகா ஹோட்டல் ஆகிய இடங்களை எதிா்க்கட்சிகள் பரிசீலித்த நிலையில், அங்கெல்லாம் முன்பதிவு செய்யவோ அல்லது காவல் துறையிடம் அனுமதி பெறவோ முடியவில்லை என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments