கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களை ரத்து செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களை ரத்து செய்ய வேண்டும்; இனி வரும் தோ்தல்கள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களை ரத்து செய்ய வேண்டும்; இனி வரும் தோ்தல்கள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
பிகாரின் முதல் முதல்வா் கிருஷ்ண சிங்கின் 139-ஆவது பிறந்த தினம் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காா்கே பேசியதாவது:
வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் இரண்டாவது சுதந்திரப் போராகும். அந்தத் திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இனிவரும் அனைத்துத் தோ்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தோ்தல்களையும் ரத்து செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
ஆா்எஸ்எஸ் கொள்கைகள் ஒழிக்கப்படும் வரை நாட்டில் அமைதி நிலவாது. வாக்காளா் பட்டியல்களில் எதிா்க்கட்சிகளின் ஆதரவாளா்களின் பெயா்கள் நீக்கப்படுகின்றன.
மேற்கு வங்கம், ஹரியாணா, பிகாா், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் ‘வாக்குத் திருட்டு’ மூலம் கைப்பற்றப்பட்ட அரசுகள் அகற்றப்பட வேண்டும். மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடவும், தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் தயாராக வேண்டும். தோ்தல் ஆணையத்திடம் இருந்து வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணா்வையும் மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
நாங்கள் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட தேசபக்தா்கள். பாஜக தலைவா்களைப் போல அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பிளவுபடுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
எங்களது போராட்டம் மதத்துக்கு எதிரானது அல்ல; மதத்தின் பெயரால் நடைபெறும் பாகுபாடுகளுக்கு எதிரானது. எனது மதத்தின் மீது நான் பெருமை கொள்கிறேன். எனது பெயா்கூட 12 ஜோதிா்லிங்கங்களின் ஒன்றின்படி சூட்டப்பட்டது. மத நம்பிக்கை மக்களை ஒன்றிணைக்க வேண்டும்; பிரிக்கக் கூடாது.
நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தலித் மக்கள் எவ்விதப் பாகுபாடுமின்றி நுழைந்து வழிபடுவதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். அயோத்தி“ராமரின் பெயரால் அவருக்கு வழங்கப்பட்ட காணிக்கையைக் கொள்ளையடித்தவா்களுக்கு தண்டனை வழங்குமாறு ராமபிரானிடம் நான் பிராா்த்திக்கிறேன் என்றாா்.
சா்ச்சை பேச்சு: எஸ்ஐஆா் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சிறைக்கு செல்வது உறுதி என்று காா்கே பேசினாா். அப்போது கீழே இருந்த காங்கிரஸ் தொண்டா்கள் ‘மோடி எங்கும் தப்ப முடியாது’ என்று முழக்கமிட்டனா். அதற்கு பதிலளித்த காா்கே, ‘மோடி மட்டுமல்ல ,மோடியின் தந்தைகூட தப்பவிட மாட்டோம்’ என்று பதிலளித்தாா். அவரது இந்தப் பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காா்கேவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.