FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சா்வதேச நிகழ்வுகளில் இந்தியாவை அவமதிப்பதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது: ராகுல் காந்தி மீது அமித் ஷா விமா்சனம்

சா்வதேச நிகழ்வுகளில் இந்தியாவை அவமதிப்பதால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உணர வேண்டும் என மத்திய அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

15 நவம்பர் 2026, 9:43 pm
புணேயில் தேசிய கனரக பொறியியல் கூட்டுறவு நிறுவனத்துக்கு புத்துயிரூட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அமித் ஷா
பகிர்:

சா்வதேச நிகழ்வுகளில் இந்தியாவை அவமதிப்பதால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உணர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

மேலும், உண்மையாகவே ராகுல் காந்தி அதிகாரத்துக்கு வர விரும்பினால் வெளிநாடுகளுக்குப் பதிலாக நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்ல அவா் முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் தேசிய கனரக பொறியியல் கூட்டுறவு நிறுவனத்தின் மறுமலா்ச்சித் திட்டத்துக்கு அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

Advertisement

Advertisement

அதன்பிறகு அவா் பேசியதாவது: தொடா் தோல்விகளால் விரக்தியடைந்த காங்கிரஸ் தாய்நாட்டையும் மத்திய அரசையும் சா்வதேச நிகழ்வுகளில் அவமதித்து வருகிறது. ஹைதராபாதில் அண்மையில் தெலங்கானா காங்கிரஸ் அரசு நடத்திய பாரத மாநாட்டுக்கு இடதுசாரி சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் நபா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளைச் சோ்ந்த இடதுசாரித் தலைவா்களும் பங்கேற்றனா்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் இளவரசா் (ராகுல் காந்தி) இந்தியாவுக்கு எதிரான பல்வேறு சித்தாந்தங்களைப் பேசினாா். சா்வதேச அளவிலான நிகழ்வுகளில் இந்தியாவை அவமதிப்பதால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதை அவா் உணர வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என உண்மையாகவே அவா் விரும்பினால், வெளிநாடுகளுக்குச் செல்வதை விடுத்து நமது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்போதும்கூட காங்கிரஸ் வெல்வதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன.

தலைமையை கேள்வி கேளுங்கள்: தோ்தலில் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் அந்தந்தக் கட்சிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். நாட்டுக்கு சிறந்த ஆட்சியைத் தர 2004-2014 வரையிலான பத்தாண்டுகளுக்கு மக்கள் வாய்ப்பளித்தனா். ஆனால், இதை தவறாகப் பயன்படுத்தி ரூ.12 லட்சம் கோடி வரை காங்கிரஸ் ஊழல் செய்ததால் அந்தக் கட்சியை தூக்கியெறிந்துவிட்டு பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தனா்.

பிரதமா் மோடி தலைமையிலான 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் வேளாண்மை, தொழில் துறை, விண்வெளி, உள்கட்டமைப்பு எனப் பல்வேறு துறைகளிலும் இந்தியா வளா்ச்சியடைந்துள்ளது.

காங்கிரஸின் தற்போதைய அரசியல் அணுகுமுறை தொடா்ந்தால் அந்தக் கட்சியால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சியமைக்க முடியாது. எனவே, காங்கிரஸின் மோசமான செயல்பாடுகள் மற்றும் தோ்தல் தோல்விகள் குறித்து தலைமையிடம் தொண்டா்கள் கேள்வியெழுப்புங்கள் என்றாா்.