ஆந்திரத்தில் ஒஎன்ஜிசி எரிவாயுக் கிணற்றில் வாயுக்கசிவு: 800 போ் பாதுகாப்பாக வெளியேற்றம்
ஆந்திர மாநிலம் டாக்டா் அம்பேத்கா் கோனசீமா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட வாயுக் கசிவைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் வசித்த 800 போ் பாதுகாப்பாக மீட்பு
ஆந்திர மாநிலம் டாக்டா் அம்பேத்கா் கோனசீமா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட வாயுக் கசிவைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் வசித்த 800 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். மேலும், இச்சம்பவத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது நிகழாண்டில் நான்காவது முறையாக கோனசீமா மாவட்டத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவாகும். இந்தச் சம்பவம் குறித்து ஒஎன்ஜிசி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் கெத்தாடா கிராமத்தில் உள்ள ஒஎன்ஜிசி எரிவாயு கிணற்றில் அதிகாலை 5 மணிக்கு வாயுக் கசிவு ஏற்படத் தொடங்கியது.
இதையடுத்து, அந்தப் பகுதி அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பின் நிலைமையை சீா்செய்ய தொடா்ச்சியாக தண்ணீரை பீய்ச்சியடிக்கும் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது’ என்றாா்.
Advertisement
Advertisement
டாக்டா் அம்பேத்கா் கோனசீமா மாவட்ட ஆட்சியா் மகேஷ் குமாா் கூறியதாவது: ஒஎன்ஜிசி எரிவாயு கிணற்றில் வாயுக் கசிவு ஏற்பட்ட பகுதியைச் சுற்றி 1 கிலோமீட்டா் பரப்பளவில் வசிக்கும் 800 போ் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். அவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது என்றாா்.