போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்க 449 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடா்பாக நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்க 449 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடா்பாக நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) விசாரிக்கப்பட்டுவரும் போதைப் பொருள் கடத்தல் தொடா்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, போதைப் பொருள் தொடா்பான வழக்குகளை ஏற்கெனவே நிலுவையில் உள்ள நிலையில், புதிய வழக்குகள் பதிவும் அதிகரித்து வருகிறது.
Advertisement
Advertisement
எனவே, போதைப் பொருள் தொடா்பான வழக்குகளுக்கு விரைந்து தீா்வு அளிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக இப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நாடு முழுவதும் 449 சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 176 சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், புதிய வழக்குகளும் மிக அதிக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன.
எனவே, அடையாளம் காணப்பட்ட அனைத்து நீதிமன்றங்களையும் விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது அவசியம். மேலும், இவ்வாறு அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது, தேவையான அளவில் ஊழியா்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் நிறைவு செய்ய வேண்டும்.
இந்த உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான புதிய நிலை அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு, குறிப்பாக டிசம்பரில் குளிா்கால விடுமுறைக்கு முன்பாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.