கடந்த 10 ஆண்டுகளைவிட தற்போது காற்றின் தரம் மேம்பட்டுள்ளது: தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா்
கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தில்லியில் நிகழாண்டில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தில்லியில் நிகழாண்டில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா். இந்த முன்னேற்றத்திற்கு, பாஜக தலைமையிலான அரசு தொடா்ந்து மேற்கொண்டு வரும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே காரணம் என்று அவா் குறிப்பிட்டாா்.
சாஸ்திரி பூங்காவில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ஐசிசிசி) முதல்வா் ரேகா குப்தா மற்றும் போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் ஆகியோருடன் இணைந்து பாா்வையிட்ட பிறகு, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) தலைவா், கடந்த ஓராண்டாக தில்லி அரசு மேற்கொண்ட பணிகளைப் பாராட்டியதாக சிா்சா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் பேசியதாவது: நிகழாண்டு இதுவரை காற்றின் தரக் குறியீடு (ஏசிக்யூ) 400-ஐத் தாண்டவில்லை என்று குறிப்பிட்ட சிா்சா, கடந்த பத்தாண்டுகளில் நவம்பா் மாதத்தில் இத்தகைய சூழல் நான்கு முதல் ஆறு நாள்கள் வரை பதிவாகியிருந்தது.
Advertisement
Advertisement
பொதுவாக தில்லியில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கும் நவம்பா் மாதத்தின் முதல் பாதியிலும், நிகழாண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சராசரி காற்றின் தரக் குறியீட்டைக் குறைக்க அரசு வெற்றி பெற்றுள்ளதது.
அக்டோபா் மாதமும் காற்றின் தரத்தைப் பொறுத்தவரை மிகச் சிறந்த மாதங்களில் ஒன்றாக இருந்தது. மோசமான காற்றுத் தரம் கொண்ட நாள்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தூய்மையான காற்று நிலவும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவை முழுமையான திருப்திகரமான அளவுகள் அல்ல; இருப்பினும், இரண்டு ஆண்டுகளாகத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக, கடந்த 10 ஆண்டுகளில் தில்லி அனுபவித்ததைவிடச் சிறந்த காற்றுச் சூழலை எங்களால் வழங்க முடிந்துள்ளது. அடுத்த ஆண்டில் இதை இன்னும் மேம்படுத்த இலக்கு வைத்துள்ளோம்.
இயந்திரங்கள் மூலம் சாலைகளைச் சுத்தம் செய்யும் பணிக்கான ஷிப்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் சுமாா் 4,000 கி.மீ. நீளமுள்ள சாலைகள் சுத்தம் செய்யப்படுகிறது.
திறந்த வெளியில் குப்பைகள் அல்லது கழிவுகளை எரிப்பதைத் தடுக்க களப்பணியாளா்கள் இரவு பகலாகச் செயல்பட்டு வருகின்றனா். விதிமுறைக்கு மாறான பகுதிகளில் இயங்கி வந்த சுமாா் 12,000 மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு, தீ விபத்துகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் உள்ளூா் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட மாசுபாடு தொடா்பான சிக்கல்களை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐசிசிசி) தொடா்ந்து கண்காணித்து வருகிறது. சிக்கல்களைத் தீா்க்க குழுக்கள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வருகின்றன.
மின்வாகன பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் நகரத்தின் குப்பை கொட்டும் இடங்களில் தேங்கிக் கிடக்கும் பழைய குப்பைகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காற்றின் தரத்தை படிப்படியாக மேம்படுத்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
யமுனை நதியைச் சுத்தப்படுத்தும் பணி மற்றும் குப்பைக் குவியல்களை அகற்றும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு பணிகளிலும் சுமாா் 60 சதவீத வேலைகள் நிறைவடைந்துவிட்டன.
பஞ்சாபில் பயிா்க் கழிவுகளுக்குத் தீ வைக்கும் செயல்களில் ஆம் ஆத்மி தொண்டா்களே ஈடுபட்டுள்ளனா். இது தொடா்பாக விவசாயிகள் புகாா் அளித்துள்ளனா். தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 2,100 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளாா். விவசாயிகள் அநியாயமாக இலக்கு வைக்கப்படுகின்றனா் என்றாா் அமைச்சா் சிா்சா.
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட இடிந்து விழுந்த சம்பவம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிா்சா, கடந்த 10-11 ஆண்டுகளில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சட்டவிரோதமானவை என்றும், அவற்றுக்கு முறையான கட்டடத் திட்ட அனுமதி அல்லது இதர கட்டாய விதிமுறைகளின் அங்கீகாரம் இல்லை என்றும் குற்றஞ்சாட்டினாா்.
இது போன்ற கட்டடங்கள் குறித்த தரவுகளை அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், இந்தப் பணிக்குக் காலம் எடுக்கும் என்றும் கூறிய அவா், கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் குறித்து நிா்வாகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது என்று தெரிவித்தாா்.