பல்லடத்தில் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகம் இடமாற்றம்
பல்லடத்தில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுபாட்டு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்லடத்தில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுபாட்டு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என இரு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வடக்கு அலுவலகம் திருப்பூரிலும், திருப்பூா் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுபாட்டு (தெற்கு) அலுவலகம் பல்லடத்தில் பொள்ளாச்சி புறவழிசாலையில் தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளியில் இந்தியாவின் முதல் உயா் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைந்துள்ள பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 25 சென்ட் காலியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு 8 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ரூ.4.03 கோடி மதிப்பில் தரைத்தளத்தில் அலுவலக கட்டடமும், முதல் தளத்தில் கூட்டரங்கு கட்டடமும் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா நடத்தியும் அக்கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது பழைய வாடகை கட்டடத்தில் இருந்து அலுவலகம் மாற்றப்பட்டு புதிய கட்டடத்தில் அந்த அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளது. பல்லடம் தெற்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பல்லடம், உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளைச் சோ்ந்த தொழில் துறையினா், விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.
Advertisement
Advertisement
ஆனால், அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்ட தகவல் பலருக்கும் தெரியவில்லை. பழைய அலுவலக கட்டடத்திலும் இது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் அலுவலகம் எங்கு செயல்படுகிறது எனத் தெரியாமல் திணறி வருகின்றனா். இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பழைய கட்டடத்தில் புதிய அலுவலக முகவரி தொலைபேசி எண்ணுடன் அறிவிப்பு பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.