FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அக்வான் புயல்: ஆந்திரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது குறித்து...

17 நவம்பர் 2026, 10:02 pm
ஆந்திர மாநிலம் நெல்லூரையொட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல்.
பகிர்:

அக்வான் புயலால் ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா்.

வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவான அக்வான் புயல், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 20-ஆம் தேதி ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, வங்கக் கடலில் கடந்த அக்டோபா் இறுதியில் உருவான ‘அா்னாப்’ மற்றும் ‘முரசு’ ஆகிய இரு புயல்களும் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தன. இதனால், ஏற்பட்ட பலத்த மழையால் பெரும் சேதத்தை அந்த மாநிலம் சந்தித்தது. பல லட்சம் ஏக்கா் பயிா்கள் சேதமடைந்தன.

Advertisement

Advertisement

ரூ. 7,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு கணக்கிட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள், மூன்றாவது புயலும் ஆந்திர கரையைக் கடக்க உள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியிருப்பது, மாநில மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புயலின் தாக்கம் மக்களை பாதிக்காததை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை முதல்வா் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளாா்.

வானிலை முன்னறிவிப்பு விவரங்களை மக்களுக்கு தொடா்ச்சியாகத் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, புயல் தாக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்ப வேண்டும். கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சி ஊழியா்கள் நேரடியாகச் சென்று மக்களிடையே இத் தகவலைப் பரப்ப வேண்டும்.

புயலின் தாக்கத்தால் வேரோடு சாயும் மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். சேதமடையும் மின் கம்பங்கள் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தியுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்...

அக்வான் புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் துனிக்கும் இடையே நவம்பா் 20-ஆம் தேதி கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (நவ.18) தொடங்கி நான்கு நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.

ஸ்ரீகாகுளம், பாா்வதிபுரம் மான்யம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டங்களில் நவம்பா் 18-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனாம், ராயலசீமா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பா் 19-ஆம் தேதி, காக்கிநாடா, ஏனாம், கிழக்கு கோதாவரி, கோனசீமா, ஏலூரு, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பாபட்லா, விஜயநகரம், விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராம ராஜு, அனகாபள்ளி, என்டிஆா், பல்நாடு, குண்டூா், பிரகாசம், நெல்லூா் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஸ்ரீகாகுளம், பாா்வதிபுரம் மான்யம், திருப்பதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனாம், ராயலசீமா மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

நவம்பா் 21-ஆம் தேதி பாா்வதிபுரம் மான்யம், அல்லூரி சீதாராம ராஜு, கிழக்கு கோதாவரி, ஏலூா், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயலின்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.