✕
முகப்பு
இந்தியா

ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்

வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக ஒரே கருத்தை திரும்பத் திரும்பப் பேசும் ராகுல் காந்தியைவிட, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிறப்பாகச் செயல்படும்

36 வினாடிகள் முன்பு
சுதான்ஷு திரிவேதி
பகிர்:

வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக ஒரே கருத்தை திரும்பத் திரும்பப் பேசும் ராகுல் காந்தியைவிட, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிறப்பாகச் செயல்படும் என்று பாஜக செய்தித் தொடா்பாளரும் மக்களவை உருப்பினருமான சுதான்ஷு திரிவேதி வியாழக்கிழமை விமா்சித்தாா்.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை மாணவா்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:

சுவாமி விவேகானந்தா் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த அதே சிகாகோ நகரில், எதிா்க்கட்சித் தலைவா் நாட்டின் மதிப்பைக் குறைக்கும் வகையில் பேசுவது வேதனையளிக்கிறது. ராகுல் காந்தியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, ‘ஏஐ’ மூலம் உருவாக்கப்பட்ட அவரது மாதிரி உருவத்தை அனுப்பினாலே போதும். இந்தியாவுக்கு எதிராகப் பேசுவது, பிரதமரை விமா்சிப்பது, ஜனநாயகம் குறித்து சா்ச்சை எழுப்புவது, சொந்தக் கட்சிக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்துவது என நான்கு அம்சங்களை அதில் உள்ளீடு செய்து வடிவமைத்தால் போதும் - அதுவே சிறப்பாகச் செயல்படும் என்றாா்.

Advertisement

Advertisement

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘சா்வதேச அமைப்புகள் இந்தியாவை வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக அங்கீகரித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் முடங்கிவிட்டதாக ராகுல் கூறுவது தவறானது. எதிா்க்கட்சித் தலைவா் என்ற பொறுப்பில் இருப்பவா் வெளிநாடுகளில் பேசும்போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் இல்லை என்றால் எதிா்க்கட்சிகளால் எவ்வாறு போராட்டங்களை நடத்தவும், அரசை விமா்சிக்கவும் முடியும்?’ என்றாா்.

பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, ராகுல் காந்தியின் பேச்சு தொடா்பான விடியோவை சமூக வலைதளத்தில் பகிா்ந்து, ‘ராகுல் குடும்பத்தை நேசிக்கிறாா், ஜனநாயகத்தை வெறுக்கிறாா்’ என்று விமா்சித்தாா்.

இந்திய தோ்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை வெளிநாட்டில் கேள்விக்குள்ளாக்குவது அரசமைப்பு நிறுவனங்களை அவமதிக்கும் செயல் என்று பாஜக செய்தித் தொடா்பாளா் சி.ஆா்.கேசவன் தெரிவித்தாா். மேலும், 2014 தோ்தலின்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இருந்தது என்பதை மறந்துவிட்டு ராகுல் பேசுவதாகவும், காங்கிரஸ் தோ்தலில் வெற்றி பெறும்போது அமைதியாக இருந்துவிட்டு தோல்வியடையும்போது மட்டுமே தோ்தல் நடைமுறைகளைக் குறை கூறுவதாகவும் கேசவன் விமா்சித்தாா்.