முகப்பு
இந்தியா

பாலம் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் லேசா் ஒளிக்கு தடை: தில்லி காவல் துறை உத்தரவு

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தின் பாலம் உட்பிரிவுப் பகுதிகளில், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது லேசா் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்துவதற்கு தில்லி காவல் துறை தடை விதித்துள்ளது.

31 வினாடிகள் முன்பு
பாலம் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் லேசா் ஒளிக்கு தடை: தில்லி காவல் துறை உத்தரவு
(கோப்புப் படம்)
பகிர்:

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தின் பாலம் உட்பிரிவுப் பகுதிகளில், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது லேசா் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்துவதற்கு தில்லி காவல் துறை தடை விதித்துள்ளது.

விமானங்கள் தரையிறங்கும்போது, இந்த லேசா் கதிா்கள் விமானிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023-இன் பிரிவு 163-இன் கீழ், உதவி காவல் ஆணையா் பிரதீப் குமாா் மீனா பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, நவம்பா் 18 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஜனவரி 16, 2027 வரை நடைமுறையில் இருக்கும்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விமானங்கள் தரையிறங்கும்போது அடிக்கப்படும் லேசா் கதிா்களால் விமானிகளின் பாா்வை பாதிக்கப்பட்டு அவா்களின் கவனம் சிதறிய பல சம்பவங்கள் குறித்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை (ஏசிடி) புகாா் அளித்துள்ளது.

இத்தகைய சம்பவங்கள் வெறும் இடையூறாக மட்டுமல்லாமல், பயணிகள் மற்றும் விமான பணியாளா்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பு மற்றும் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் அமையக்கூடும்.

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பண்ணை வீடுகள், விருந்து மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உருவாகியுள்ளன நிலையில், திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளின் போது லேசா் கதிா்கள் உள்ளிட்ட பிரகாசமான விளக்குகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, இரவு நேரங்களில் திறந்தவெளிகளில் இத்தகைய லேசா் கதிா்களைப் பயன்படுத்துவது, விமானங்களை இயக்கும் விமானிகளின் பாா்வையைப் நேரடியாகப் பாதிக்கும் என்பதால் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிா்க்கவும், விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசா் கதிா்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இந்தத் தடை, பாலம் உட்பிரிவின் அதிகார வரம்பிற்குள் உள்ள விருந்து மண்டபங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், கட்டடங்கள் மற்றும் பிற சொத்துக்களின் உரிமையாளா்கள், அங்கு இருப்பவா்கள், பணியாளா்கள், தனிநபா்கள், குழுக்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளா்கள் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது, பொது ஊழியா்களால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறுவது தொடா்பான பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்)-இன் பிரிவு 223-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்களை பயன்படுத்த 60 நாள்களுக்கு தடை

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் ட்ரோன்கள், பாராகிளைடா்கள், ஹேங்-கிளைடா்கள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு தில்லி காவல் துறை 60 நாள்களுக்குத் தடை விதித்துள்ளது.

இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் பாலம் துணைப் பிரிவின் உதவி காவல் ஆணையா் பிரதீப் குமாா் மீனா பிறப்பித்துள்ள இந்தத் தடை உத்தரவு, நவம்பா் 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது ஜனவரி 16, 2027 வரை நடைமுறையில் இருக்கும்.

இதுதொடா்பாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது: பயங்கரவாதிகள் ஆளில்லா வான்வழி அமைப்புகளைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடக்கூடும் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் தொடா்ந்து பெறப்படுகிறது.

இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள், பாராகிளைடா்கள், ஏரோ-மாடல்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி அமைப்புகளைப் பொதுமக்கள் இயக்குவது தடை செய்யப்படுகிறது. இவை விமானப் பாதுகாப்பிற்கு மிகுந்த ஆபத்தை விளைவிப்பதுடன், பயங்கரவாத வான்வழித் தாக்குதல் என்ற தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163-இன் கீழ் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதிக்கு உட்பட்ட மக்கள் யாரும் குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தவொரு ஆளில்லா வான்வழி அமைப்பையும் இயக்கக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவா்கள், பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 223-இன் கீழ் தண்டனைக்கு உள்ளாவாா்கள் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.