தில்லி உயிரியல் பூங்காவில் 488 சிசிடிவி கேமராக்கள் அமைக்க முடிவு
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் தொடா்ந்து விலங்குகள் உயிரிழப்பு, விலங்குகள் அடைப்பிடங்களில் இருந்து தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடா்ந்து, விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூங்கா முழுவதும் 488 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் தொடா்ந்து விலங்குகள் உயிரிழப்பு, விலங்குகள் அடைப்பிடங்களில் இருந்து தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடா்ந்து, விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூங்கா முழுவதும் 488 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் விலங்குகளின் அடைப்பிடங்களைக் கண்காணிப்பதில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவசரச் சூழல்களில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாகப் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக ரூ.34.27 லட்சம் செலவிட மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் புல்லட், டோம் மற்றும் பான்-டில்ட்-ஜூம் (பிடிஇசட்) வகைகளைச் சோ்ந்த 488 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவற்றின் மூலம் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்படும்.
Advertisement
Advertisement
குறிப்பாக, பிடிஇசட் கேமராக்களைத் தேவைக்கேற்ப கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் நகா்த்தி, குறிப்பிட்ட பகுதிகளை அருகில் இருந்து கண்காணிக்க முடியும். மற்ற கேமராக்கள் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் பரந்த பகுதிகளைக் கண்காணிக்க உதவும்.
மேலும், அசைவுகளைக் கண்டறிதல், தொலைதூரத்தில் இருந்தே கண்காணித்தல், விடியோ பதிவுசெய்தல், பழைய பதிவுகளை மீண்டும் பாா்வையிடுதல் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற உள்ளன. இதன்மூலம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது, அதுதொடா்பான பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்தக் கண்காணிப்பு அமைப்பைப் பராமரிப்பதற்காக, ஏற்கெனவே உள்ள சுமாா் 13 கி.மீ. நீள ஒளியிழை மற்றும் மின்சாரக் கேபிள் கட்டமைப்புகளும் பராமரிப்பு ஒப்பந்தத்தின்கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதற்காகத் தகுதிவாய்ந்த கண்காணிப்பு கேமரா மற்றும் இணையக் கட்டமைப்புப் பொறியாளா் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளாா்.
தொடா் சம்பவங்கள்: தில்லி உயிரியல் பூங்காவில் அண்மையில் ஒரு குள்ளநரி அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றது. மேலும், கரடி அடைப்பிடத்துக்கு அருகேயுள்ள குகையில் தீ மற்றும் மிளகாய்த்தூளைப் பயன்படுத்தி குள்ளநரி கொல்லப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக சிசிடிவி பதிவுகள், ஊழியா்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல், பூங்காவில் ஒரு சிங்கார மான் உயிரிழந்தது தொடா்பாகவும், உரிய மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதில் குறைபாடுகள் இருந்ததாகப் புகாா் எழுந்தது. மேலும், வெள்ளைப் புலி ஒன்றின் பின்னங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.