நவ. 30 வரை சௌதி நகரங்கள் உடனான விமான சேவை ரத்து! - இந்திய நிறுவனங்கள் அறிவிப்பு!
சௌதியின் முக்கிய நகரங்கள் உடனான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு...

சௌதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் உடனான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகள் ரத்தானது நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கும், யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் வெடித்துள்ளன.
இந்த மோதலைத் தொடர்ந்து, சௌதியின் தலைநகர் ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று (நவ. 20) ரியாத் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து ஹௌதிகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், சௌதி நகரங்கள் உடனான விமான சேவைகளை பல்வேறு நாடுகளின் விமான நிறுவனங்கள் தொடர்ந்து ரத்து செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஜெட்டா உடனான விமான சேவைகளின் ரத்து நவ.24 ஆம் தேதி வரையிலும், ரியாத் மற்றும் தம்மாம் உடனான விமான சேவைகளின் ரத்து நவ.30 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுவதாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏற்கெனவே, நவ. 30 ஆம் தேதி வரையில் சௌதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் உடனான விமான சேவைகளை இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.